உள்நாடு

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம் – சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நாளை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளைய தினம் திங்கட்கிழமை (25) ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை 2 ஆயிரத்து 312 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 32 ஆயிரத்து 183 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

அவர்களில் பாடசாலை ரீதியிலான விண்ணப்பதாரர்கள் 2 இலட்சத்து 53 ஆயிரத்து 390 பேரும் 79 ஆயிரத்து 793 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குகின்றனர்.

உயர்தரப் பரீட்சையின்போது, பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களுக்குள் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலதிக பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களும் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்த முடியும் எனவும் பரீட்சை மண்டப உதவி பொறுப்பதிகாரிகள் அல்லது கண்காணிப்பாளர்கள் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு – 13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

இன்றும் இடியுடன் கூடிய மழை

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா