அரசியல்உள்நாடு

வெற்றி தோல்விகள் நிரந்தரமானவை அல்ல – எஸ்.எம். மரிக்கார்

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தைப் பெறுவதற்காக நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வழங்கிய இந்த ஆணையை ஐக்கிய மக்கள் சக்தி மதிக்கிறது.

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தைப் பெறுவதற்காக நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்மட்டத்திற்கு கொண்டு வந்து நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த, மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதே எதிர்க்கட்சியின் முதன்மை பணியாகும்.

நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லவோ, நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கவோ, அல்லது குறுகிய அரசியல் நலன்களின் அடிப்படையில் செயல்படவோ ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செயல்படாது.

ஆனால் அரசாங்கம் தவறான பாதையில் செல்லும் போது, அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.

கடன்களை செலுத்தும் இயலுமையை அதிகரிப்பது, வருமான மூலங்களை அதிகரிப்பது, உற்பத்தியை அதிகரிப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது, கல்வியை மேம்படுத்துவது, விவசாயத்தை மேம்படுத்துவது, பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது, வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கான தீர்வுகள் ஜனநாயகம் பாதுகாக்கப்படல் போன்ற விடயங்களில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறே, ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த ஆணையை உரிய முறையில் அமுல்படுத்துவதற்காக கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்குப் பதிலாக தனியொரு அரசாங்கத்தை அமைப்பதற்கான அதிகாரத்தை வழங்குமாறு ஜனாதிபதி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

எனவே தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கினர். தமக்கு கிடைத்த கூடிய அதிகாரத்தை முறையாக செயல்படுத்தி மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரச நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

விமர்சனங்களுக்கு அப்பால் சென்று, பாராளுமன்ற குழுக்களில் பங்களித்து, வலதுசாரி முகாமின் கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டு, ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாத்து, பாராளுமன்றத்தில் அவர்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுவோம்.

பாராளுமன்றத்தில் அதிகாரங்களுக்கிடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளை ஏற்படுத்த ஐக்கிய சக்தியின் பாராளுமன்ற குழு பாராளுமன்றத்தில் செயற்படும்.

வலதுசாரிக் அரசியல் கொள்கையை பின்பற்றும் தரப்பினர் இரண்டாக பிரிந்ததால் அம்முகாமை பின்பற்றும் மக்கள் வாக்களிக்கவில்லை.

இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 60 சதவீதம் ஆனோரே வாக்களித்துள்ளனர். இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் முகாமுக்கு வலதுசாரி கொள்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குறிப்பிட்ட தரப்பினரும் வாக்களித்துள்ளனர்.

வலதுசாரி முகாம் இரண்டாக பிளவுபட்டுள்ளதால் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் எங்கள் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒரு கட்சி ஓரிரு தேர்தல்களில் தோல்வியடைந்த மாத்திரத்தில் அது அரசியலில் அடுத்துச் செல்லப்படாது. எந்த கட்சி வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி என்றென்றும் நிலைக்காது.

வெற்றி தோல்விகள் நிரந்தரமானவை அல்ல. இலங்கையின் அரசியல் கலாசாரம் புதுப்பிக்கப்பட்டால் மட்டுமே வெற்றிகளைப் பெற முடியும் என்றார்.

Related posts

எதிர்வரும் 20 : 9வது பாராளுமன்றம்

ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை

கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் – கையொப்பமிட்ட ஆளுநர்