சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு பகிரங்கமான அழைப்பை விடுப்பதாக அக்கட்சியின் உறுப்பினரான ஆஷு மாரசிங்க பகிரங்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் பொதுத்தேர்தல்முடிவுகள் சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுத்தேர்தலின் பின்னரான சூழல்கள் உணரப்பட்டுள்ள நிலையில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிடத்தில் பகிரங்கமான கோரிக்கையொன்றை முன்வைக்கின்றேன்.
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மீண்டும் இணைந்து செயற்பட வேண்டும். யானையை மீண்டும் பலப்படுத்த வேண்டும். இந்த விடயத்தினைக் கோரியமைக்காக என்னைக் கட்சியில் இருந்து நீக்குவார்களோ தெரியாது.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவது மிகவும் அவசியமானதொரு விடயமாகும். ஐக்கிய மக்கள் சக்தியை இணைப்பது தான் தற்போதுள்ள சவாலான விடயமாகும். அந்த சவாலை முகங்கொடுப்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என்றார்.