உள்நாடு

தேசபந்துவுக்கு எதிரான மனு மீதான விசாரணை திகதி அறிவிப்பு

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட 8 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, நீதிமன்றத்தில் காரணிகளை முன்வைத்து, இந்த மனுக்களில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள தற்போதைய ஜனாதிபதியின் சார்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு, உரிய ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கியது.

இதன்போது தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான அவரது சட்டத்தரணிகள், இது தொடர்பான அடிப்படை உரிமை மனுக்களை முழுமையாக நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக ஒரு குற்றப் பத்திரிகை சமர்ப்பித்துள்ளனர். இதற்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் வேறு குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

குற்றப் பத்திரிகை குறித்து தீர்மானிக்க இதனை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று​ம் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மனுக்களை பெப்ரவரி 24 மற்றும் 25ஆம் திககளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை ஜனாதிபதிக்கு முறையான பரிந்துரையை வழங்கவில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.

முறையான பரிந்துரை இன்றி அவரை பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிப்பதன் மூலம் அரசியலமைப்பு மீறப்படுவதுடன், தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படும் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறும் மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த மனு மீதான விசாரணையை கடந்த ஜூலை மாதம் அனுமதித்த உயர் நீதிமன்றம், பொலிஸ்மா அதிபர் என்ற வகையில் தேசபந்து தென்னகோன் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமாவை சந்தித்தார் 

விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ரிஷாட் கோரிக்கை [VIDEO]

தனிமைப்படுத்தல் பகுதிகளிலுள்ள மக்களுக்கான அறிவித்தல்