அரசியல்உள்நாடு

நான் உயிரோடு இருக்கும் வரை நீங்கள் நசுக்கப்படும் சமூகமாக இருப்பதற்கான சந்தர்ப்பத்தை தரப்போவதில்லை – அமீர் அலி

கல்குடாவிலுள்ள நாம் ஒவ்வொருவரும் சமூகப்பொறுப்பின்றி வாக்களிப்போமாக இருந்தால், ஒரு வட்டித்தொழிலாளி, குடு வியாபாரி தலைவனாவான் என ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட 1ம் இலக்க வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

நேற்று (09) காவத்தமுனையில் இடம்பெற்ற பிரதேச இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “கல்குடாவின் அரசியல் என் குடும்ப சொத்தல்ல. இது ஒட்டுமொத்த கல்குடாவின் சொத்து. கல்குடாவின் எதிர்கால அரசியலை உயிர்ப்பிக்கும் ஆற்றல் இளைஞர்களின் கைகளிலே உள்ளதென்பதை இங்கே கலந்து கொண்டுள்ள இளைஞர் கூட்டம் பறைசாற்றி நிற்கிறது.

கல்குடாவின் எதிர்கால தலைமைத்துவம் குறித்து எதிர்காலத்தில் அதிகமதிகம் பேசவுள்ளேன்.

மாவட்டத்திகான முஸ்லிம் அரசியலை நிர்வகின்ற பக்குவம் கல்குடா இளைஞர்களிடத்திலே இருக்கிறது என்பதை இந்த இளைஞர் கூட்டம் துள்ளியமாகச் சொல்கின்றது

“மாற்றம் வேண்டும். மாற்றம் வேண்டும்” என ஓடியலைந்த இளைஞர்களை இந்த தலைவர்கள் திசை காட்டியை காட்டி திசை மாற்றப்பார்த்தார்கள். ஏமாற்றத்தைத் தான் தந்தார்கள் என்பதை இந்த இளைஞர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

அவர்கள் தொடர்ச்சியாக இவ்வாறு தான் செய்து வருகிறார்கள். அவர்களின் இலக்கு இந்த ஊரை, மாவட்டத்தை, முஸ்லிம்-தமிழ் உறவைப்பற்றியதல்ல.

அவர்களின் இலக்கெல்லாம் பதவி, பட்டங்களைப் பெற்றுக் கொண்டு தாங்களும் தங்களைச் சார்ந்தவர்களும் வயிறு வளர்த்துக் கொண்டு போகலாம் என்பது தான்.

இந்த எதிர்பார்ப்பின் காரணமாகத்தான் உங்களையெல்லாம் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப் பார்த்தார்கள். முத்தாக நீங்கள் தப்பி வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நீங்கள் தான் கல்குடாவினதும் மட்டக்களப்பு மாவட்டத்தினதும் நாளைய தலைவர்களாக வரவிருக்கின்றீகள்.

உங்களுக்கும் சமூகப்பொறுப்புள்ளது என்பதை இந்த மணி நேரத்திலாவது உணர்ந்து கொண்டமை சாலச்சிறந்தது.நான் பெருமைப்படுகின்ற விடயமாகும்.

கடந்த காலங்களில் இப்பிரதேச ஹாஜிமார், உலமாக்கள், பள்ளிவாயல் தலைவர்கள், விளையாட்டுக் கழகங்கள், மாதர், கிராம அபிவிருத்திச்சங்கங்கள் இணைந்து இப்பிரதேச அரசியலை இன்னார் வேட்பாளர் இன்னாரைத்தான் நாம் ஆதரிக்க வேண்டுமென பள்ளிவாயலிலே தீர்மானித்தார்கள். இது தான் கடந்த கால வரலாறு.

அந்நாட்களில் சகல பிரதேசத் தலைவர்களும் தெளிவான பார்வையோடு இருந்து தெளிவான முடிவை எடுத்தார்கள். அதனை கல்குடா சமூகம் ஏற்றுக்கொண்டது.

பள்ளிவாயல் நிருவாகங்கள், இளைஞர் அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள் இவர்களெல்லாம் கடந்த காலங்களில் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டதுடன், எல்லோருமாக ஒன்றிணைந்து விடுதலைப்புலிகள் கோலோச்சிய காலத்திலும் மாவட்டத்தின் தலைமைத்துவத்தை கல்குடாவிலிருந்து பெற்றுத்தந்தார்கள்.

அவர்களுடன் அப்போது பணியாற்றிய உங்களைப் போன்ற இளைஞர்கள் இங்கே நாற்பது வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள்
அவர்களின் வழிகாட்டல் உங்களுக்கு மிக முக்கியமானது.

இறுதிவரை உங்களின் எதிர்காலத்துக்காக தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

கடந்த கால தேர்தல்களில் பிரதேச சபைத்தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்களின் வகிபாகங்கள் தொடர்பிலான தேடல் உங்களிடத்தில் அதிகமதிகம் இருக்க வேண்டும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறீர்கள்.

அந்த மாற்றத்தை நான் செய்யாமல் விட்டிருந்தால் நாங்கள் எல்லோரும் நஷ்டவாளிகள். எதிர்காலத்தில் நஷ்டப்பட்டுப் போயிருப்போம்.

சமூகத்தின் முகவரியை இழந்து தவிக்கின்ற இளைஞர் சமூகமாக நாம் இருந்து விடக்கூடாது.

நான் உயிரோடு இருக்கும் வரை நீங்கள் நசுக்கப்படும் சமூகமாகவோ அல்லது இம்மாவட்டத்திலே செல்லாக்காசான சமூகமாகவோ இருப்பதற்கான சந்தர்ப்பத்தை தரப்போவதில்லை.

நாங்கள் உங்களைத் தட்டிக்கொடுக்கின்ற உங்களின் எதிர்காலத்திற்கு தோள் கொடுக்கின்ற தலைவனாக இருக்கப் போகின்றேன் என்பது தான் வாஸ்தவம்.

இதனை நீங்கள் நம்பியாக வேண்டும். ஏனென்றால், சமூக மாற்றம் அவசியமாகத் தேவைப்படுகின்றது.

தேசியத்தில் சொன்ன மாற்றம் கல்குடாவில் எதிர்பார்க்கும் மாற்றமல்ல. கல்குடாவில் எதிர்பார்த்த மாற்றம் எல்லோரும் தேர்தல் கேட்கக்கூடாது. திசைகாட்டியைச் சேர்ந்தவர் மட்டும் தேர்தல் கேட்க வேண்டும் என்பது தான். அது கனவு காண்கின்ற விடயம்.

இப்பிரதேசத்திலே இருக்கின்ற சாதாரண ஒருவர் வெறுமனே நாடாளுமன்றம் போய் என்ன மொழியில், என்ன விடயத்தைப் பேசப்போகின்றார் என்ற மிகப்பெரிய கேள்வி நம் முன்னே இருக்கின்றது.

எமது எல்லைக்கிராமங்கள் எரிக்கப்படுகின்றது. கிராமங்களில் சுட்டு வீழ்த்தப்படுகின்றார்கள். எங்களை நசுக்கிறார்கள் பெரும்பான்மை சமூகத்தினால் தொல்லை ஏற்பட்டுள்ளது. எங்களின் காணிகள் பறிக்கப்பட்டுள்ளது. எங்களது அடையாளங்கள் சிதைக்கப்பட்டுள்ளது. எங்கள் பள்ளிவாயல் உரிமை மறுக்கப்படுகின்றது என்பதை அடித்துச்சொல்கின்ற ஒரு தலைவன் தேவையா? அல்லது எது வந்தாலும் நாம் கூடிக்கதைப்போம் சாப்பிடுவோம் எனச்சொல்கின்ற தலைமைத்துவம் தேவையா? என்று யோசிக்க வேண்டிய நேரத்தில் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

என் அன்புக்குரிய இளைஞர் சமூகமே!,

இவ்வாறு கடந்த கால பாடங்களில் அனுபவங்களில் படிப்பினை பெறும் மாற்றமே தேவை. வெறுமனே தலை மாற்றுகின்ற மாற்றமல்ல. என்ன மாற்றம் வேண்டுமென்பதில் சமூகம் தெளிவாக இருக்க வேண்டும்.

நல்ல அரசியல் வழிகாட்டுதலை இந்த அரசியல் தலைவன் உங்களுக்கு செய்து தரவில்லை என்றால், இச்சமூகத்தைச் சீரழித்து விட்டுப்போகின்ற தலைவர்களாகவே இந்த மாற்றத்தைப்பேசும் தலைவர்கள் இருக்கப் போறுகிறார்கள்.

இது தொடர்பில் இவர்களுக்கு எந்தக்கவலையும் இல்லை. நாம் பொறுப்போடு வாக்களிக்க வேண்டும்.

பொறுப்புத்தவறி வாக்களிப்போமாக இருந்தால் என்றாவது ஒரு வட்டித்தொழிலாளி, குடு வியாபாரி தலைவானாவான் என்பதை நான் கடந்த நாட்களிலிருந்தே சொல்லி வருகின்றேன்.

தற்போது அப்பணியைச் செய்கின்ற அளவு நாங்கள் வந்திருக்கின்றோம். ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட அச்சத்திலிருந்து இந்த கல்குடா சமூகத்தைப் பாதுகாக்க முழு முயற்சியை மேற்கொண்டோம்.

எதிர்காலத்தில் இவ்வாறான போராட்டங்கள் ஏற்படாமல் இருக்க முடியாது. அதனை எதிர்கொள்வதற்கான தலைவர்கள் இருக்க வேண்டும்.

வெறுமனே மாற்றம் என்று ஏமாற்றத்தைத் தருகின்ற தலைவர்கள் இப்போது உங்கள் முன் வந்துள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே கிடைக்கவிருக்கின்ற ஒரேயொரு முஸ்லிம் ஆசனத்துக்காக கல்குடாவிலே இருக்கின்ற உங்களைப் போன்ற இளைஞர் சமூகத்தை நம்பியே என் கழுத்தை கொடுத்துள்ளேன்.

கடந்த காலங்களில் மூவாயிரம் வாக்குகளைப்பெற முடியாமல் போனமையினால் கல்குடாவிலே மட்டக்களப்பு மாவட்டத்திலே கல்வி பற்றி காணி பற்றி பேசக்கூடிய உங்களுக்காக குரல் எழுப்பக்கூடிய போராடக்கூடிய ஆர்த்மார்த்தமான குரலை தலைமையை இழந்தோம்.

உங்கள் கல்வி காணி பற்றி அதிகமதிகம் பேசியவன் நான். ஆங்கிலத்தில் சண்டை பிடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒரெயோரு அரசியல்வாதியும் நான் தான். நான் உங்களுக்காகவே இருக்கிறேன் என்பதை தயவு செய்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தேர்தலுக்காக எம்மால் முடிந்த அத்தனையும் செய்து விட்டோம். இதன் பிறகு வாக்களிக்கும் பொறுப்பினையும் வாக்களிக்க வைத்து வெல்ல வைக்கின்ற பொறுப்பினையும் பொறுப்பேற்கின்ற கடமை இளைஞர்களாகிய உங்கள் கரங்களில் ஒப்படைத்துள்ளேன் இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் தமது கடமையை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இதில், பிரதேச இளைஞர்கள், செயற்பாட்டாளர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் இளைஞரணியினர், ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

-எஸ்.எம்.எம். முர்ஷித்

Related posts

பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தல்

விசாரணைக்கு 4 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

நாளை கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல்