அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர அரசாங்கம் சறுக்குவதற்கு ஆரம்பித்துள்ளது – சுமந்திரன்

ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் ஒருமாதகாலத்துக்குள்ளேயே சறுக்குவதற்கு ஆரம்பித்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எனும் தொனிப்பொருளில் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மக்கள் மன்றம் நேற்றைய தினம் (9) யாழ். கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சி பழம்பெரும் கட்சியாகும். தற்போது மாற்றம் தேவை என்று கூறுபவர்கள் பழம்பெரும் கட்சியை விட்டுவிட்டு புதிய கட்சிக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றார்கள். அது உண்மையான மாற்றம் அல்ல.

அடையாளம் மாற்றாத அரசியல் மாற்றமே உண்மையான மாற்றமாகும். நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தேசம் என்கிற அடையாளத்தினை வழங்கியது எமது கட்சியாகும். அதன் காரணத்தினால் தான் எமது கட்சியின் ஸ்தாபகரை தந்தை செல்வா என்று அழைக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றோம்.

அவ்வாறான நிலையில் ஏனைய கட்சிகள் தற்போது தான் சமஷ்டி பற்றி பேசுகின்றார்கள். அவ்வாறான நிலையில் நீண்டகாலமாக சமஷ்டியை வலியுறுத்தும் எமக்கு வாக்களிப்பதில் என்ன தவறுள்ளது.

அதேநேரம், தமிழரசுக் கட்சி பொருத்தமான மாற்றங்களை செய்துகொண்டுதான் வருகிறது. உதாரணமாக, யாழ்.தேர்தல் மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால் ஒன்பது வேட்பாளர்களில் இருவரைத் தவிர ஏனைய எழுவரும் பாராளுமன்ற தேர்தல் களத்துக்கு புதியவர்கள்.

அதேபோன்று அவர்களில் இரண்டு பெண் வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக, பெண் வேட்பாளர்கள் ஆணை மையப்படுத்திய வகையில் தான் தெரிவு செய்வார்கள்.

ஆனால் இம்முறை உண்மையான செயற்பாட்டாளர்களை நாம் அடையாளம் கண்டு நிறுத்தியிருக்கின்றோம்.

அதேவேளை, நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறியுள்ள ஜனாதிபதி பதவியேற்று ஒருமாதத்துக்குள்ளேயே தனது செயற்பாடுகளில் இருந்து சறுக்க ஆரம்பித்துவிட்டார்.

மதுபான சாலைகளுக்கான சிபார்சுக்கடிதங்களை வழங்கிய அரசியல்வாதிகள், அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்களின் பட்டியலை அவர் தற்போது வரையில் வெளிப்படுத்தவில்லை.

ஜனாதிபதி அநுர, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை ஏற்கனவே எமது பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட இடைக்கால அறிக்கையினை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கவுள்ளதாக எழுத்துமூலமாகவே தனது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளார்.

இடைக்கால அறிக்கையை நாம் தயாரித்து அதனை வெளியிடுவதற்கு தயாரானபோது, அப்போது அநுரகுமார எம்மிடத்தில் வருகை தந்து கூறினார்…

இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராகவும், மாகாண சபை முறைமைக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தியவர்கள் நாங்கள். ஆகவே இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கம் சம்பந்தமாக நாம் கட்சிக்குள் ஆராய வேண்டும் என்று எனக்கும் சம்பந்தனுக்கும் கூறினார்.

அதனையடுத்து, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் அவரை நாங்கள் அழைத்துச் சென்று அவரது கூற்றில் நியாயம் உள்ளது.

கால அவகாசத்தினை வழங்குவோம் என்று கூறினோம். ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக அநுர குறிப்பிட்டார்.

அரசாங்கம் சறுக்க ஆரம்பித்துள்ளது. அதனை கையாள வேண்டியுள்ளது. இடைக்கால அறிக்கையை முன்னோக்கி நகர்த்த வேண்டியுள்ளது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கும் செயற்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக பலமான அணியொன்றை வடக்கு, கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் அனுப்ப வேண்டும். அந்த அணியானது தமிழரசுக் கட்சியாகவே இருக்க வேண்டும் என்றார்.

Related posts

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்த தடை – பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி

editor

அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களுக்கு அனுமதி

நாடளாவிய ரீதியில் மீளவும் இன்று முதல் ஊரடங்கு அமுலுக்கு