அரசியல்உள்நாடு

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது – சஜித்

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் ஆபத்தான முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவின் மூலம் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் அசௌகரியத்திற்கு ஆளாக நேரிடும்.

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு, 5 வயதுக்குட்பட்ட எடை குறைவான குழந்தைகள், இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் திரிபோஷாவைப் பெற்று வருகின்றனர். மாதம் ஒன்றுக்கு 16 இலட்சம் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது 664920 தாய்மார்களுக்கும் 925172 குழந்தைகளுக்கும் இது வழங்கப்பட்ட வருகின்றன. தற்போதைய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2403/53 மூலம் திரிபோஷ நிறுவனத்தை கலைப்பதற்கு அல்லது வேறு நிறுவனத்துடன் இணைப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திரிபோஷ உற்பத்தியை வழங்கிய இந்த நிறுவனத்தை மூடுவதற்கு அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இயந்திரங்களின் திறன் திரிபோஷா உற்பத்தியை விட அதிகமாக இருப்பதால், இந்த நிறுவனம் மேலதிக உற்பத்திகளைச் செய்து ஆண்டுதோறும் 500 மில்லியனை அரசாங்கத்திற்கு வழங்குகிறது.

இவ்வவாறான ஒரு நிறுவனத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களின்படி மூடுவதற்கும் கலைப்பதற்கும் செயற்பட்டு வருகிறது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு மத்திய கொழும்பு பிரதேச முஸ்லிம் மக்களுடனான சந்திப்பொன்று இன்றைய (09) தினம் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் எரந்த வெலியங்க அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமீபகால வரலாற்றில், சகல அரசாங்கமும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் திரிபோவை வழங்கியுள்ளன.

தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் பலமாக விளங்கும் திரிபோஷ தொழிற்சாலையை தற்போதைய அரசாங்கம் மூட நடவடிக்கை எடுத்துள்ளமையானது கவலையளிக்கும் விடயமாகும்.

சாதாரண மக்களையும் ஏழைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் எனக் கூறிக் கொள்ளும் இந்த ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே இதைச் செய்கிறது. இதற்கு எதிராக போராடி இந்த முயற்சியை தோற்கடிப்போம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க மேடை மேடையாக கூறியவை தற்போது ஜனாதிபதியாக அனைத்தும் பொய்யாகி, செயலில் நடத்திக் காட்ட தோல்வி கண்டுள்ளார் என்பதை அவரே நிரூபித்துள்ளார்.

துறைமுகத்தில் இருந்து ஒரு விலைக்கு எரிபொருள் இறக்கப்பட்டு, மற்றொரு விலைக்கு மக்களுக்கு விற்கப்படுவதாகவும், அதிக வரி, ஊழல், மோசடி, திருட்டு போன்ற காரணங்களே இதற்குக் காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஆட்சிக்கு வந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் கூறிய எரிபொருள் மாபியாவை நிறுத்த முடியாது போயிருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்த இலஞ்சம், ஊழல்கள், திருட்டுக்களை கண்டுபிடிக்க முடியாது என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி நியமித்த புதிய தலைவர் தெரிவிக்கிறார்.

நிதியமைச்சின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே எரிபொருள் விலையை குறைக்க முடியும், எரிபொருள் விலை குறைந்தால் நாடு வங்குரோத்தடைந்து விடும் என்றும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறும்போது, ஜனாதிபதி அனுர உட்பட ஜே.வி.பி.யின் முன்னனணித் தலைவர்கள் பொய்களைக் கூறித் திரிகின்றனர் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவ்வாறே, நாட்டில் உள்ள ஆசிரியர்கள், மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்காத இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குமா என்பதில் சிக்கல் காணப்படுவதாக சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

Related posts

டிஜிட்டல் ID இற்கு இந்தியாவின் உதவி

கொரோனாவை கட்டுப்படுத்த 25 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள்

தென் கொரிய சபாநாயகர் இலங்கைக்கு வருகை