அரசியல்உள்நாடு

வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மூவர் கைது

வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச் சாட்டில் மூன்று வேட்பாளரின் வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று புதன்கிழமை (06) தெரிவித்தனர்.

வேட்பாளரின் உருவப்படம் மற்றும் ஸ்டிக்கர் பொறித்த வாகனங்களில் வேட்பாளர்கள் பயணிக்க முடியும். வேட்பாளரின்றி அவருடைய உருவப்படம் அல்லது ஸ்டிக்கர் பொறித்த வாகனங்கள் பயணிப்பதற்கு தேர்தல் திணைக்களம் தடை விதித்துள்ளது.

குறித்த விதிமுறையை மீறி வவுனியாவில் வேட்பாளரின்றி வேட்பாளரின் ஸ்டிக்கர்களுடன் நடமாடிய மூன்று வாகனங்களே வவுனியாப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ப.சத்தியலிங்கம், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரது படம் பொறித்த வாகனங்களே தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

இலங்கையின் சட்டவரைபுகள் குறித்து ஐ.நா – கவலை.

இங்கிலாந்தில் இருந்து மேலும் 154 பேர் நாடு திரும்பினர்

11 வழிபாட்டு தலங்கள் புனித பூமியாக அறிவிப்பு!