முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றிருந்தால், அதனை முஸ்லிம் சமூகத்துக்குள் கலந்துரையாடி தேவையான திருத்தங்களை நாங்கள் செய்வோம்.
மாறாக அதில் தலையிடுவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லை. மக்கள் விடுதலை முன்னணி எப்போதும் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையுடையது.
அதனால் எதிர்காலத்தில் எமது தனியார் சட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மத்திய கொழும்பில் திங்கட்கிழமை (4) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோலடவியடைவார் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். என்றாலும் சஜித் பிரேமதாச வெற்றிபெறக்கூடாது என்பதற்காக தேர்தலில் பாேட்டியிட்டார். அதேபோன்று தற்போது இந்த தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க ஒரு சிலரை களமிறக்கி இருக்கிறார்.
அவர்கள் மாகாணசபை தேர்தலில் கூட வெற்றிபெற முடியாமல் போனவர்கள். அதனால் பாராளுமன்றம் செல்லும் நோக்கில் அவர்கள் போட்டியிடுவதில்லை. மாறாக மத்திய கொழும்பில் வாக்குகளை சிதறடித்து நாங்கள் பாராளுமன்றம் செல்வதை தடுப்பதே இவர்களின் நோக்கமாகும்.
அதனால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் இவர்களின் நோக்கத்தை மக்கள் தோற்கடிக்க வேண்டும். வாக்குகளை சிதறடிக்க வைக்கும் இவர்களின் சதியில் சிக்காமல் மத்திய கொழும்பில் இருந்து மக்கள் பிரதிநிதியை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் கஷ்டங்களுக்கும் முகம்கொடுத்த போது, முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக வீதிக்கிறங்கி போராடியும் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தும் சமூகத்தை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்ததை எமது மக்கள் நன்கறிவார்கள். மக்கள் தங்களின் வாக்களை அளித்து எம்மை பாராளுமன்றத்துக்கு அனுப்பியதாலே அதனை எங்களுக்கு செய்ய முடியுமாகி இருந்தது.
அதனால் எதிர்காலத்திலும் முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்சினைகள் எதுவும் ஏற்பமாது என சொல்ல முடியாது. ஏனெனில் தற்போது ஆட்சியில் இருப்பது மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கமாகும்.
ஒரு நாடு ஒரு சட்டமே இவர்களின் கொள்கை. அனைத்து இன மக்களும் ஒரு சட்டத்தில் இருக்க வேண்டும் என்றே இவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அதுதான் எமது நிலைப்பாடு என தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து இன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
எமது சமூகத்தைச் சேர்ந்த சிலரும் தற்போதைய பிரதமருடன் இணைந்து முஸ்லிம் விவா விவாகரத்து சட்டத்தை நீக்க வேண்டும் என 2019ல் குரல்கொடுத்து வந்தார்கள்.
ஆனால் தற்போது அவர்களின் ஆட்சியே நாட்டில் இருக்கிறது என்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது. அவர்களின் தாக்கம் இந்த தேர்தலுக்கு பின்னரே வெளிப்படும். எமது நாட்டில் எங்களுக்கு என தனியான சட்டங்கள் இருக்கின்றன.
அதில் குறைபாடுகள் இருந்தால் அதுதொடர்பில் கலந்துரையாடி திருத்தம் மேற்கொள்ள வேண்டியது முஸ்லிம் சமூகமாகும். அவ்வாறு இல்லாமல் பிரதமர் ஹரினியோ பிமல் ரத்நாயக்கவோ அல்லது வேறு யாருமோ அதில் தலையிட உரிமை இல்லை.
எனவே மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் இந்த விடயங்களை பாராளுமன்றத்தில் எழுப்புவார்கள். அப்போது இதற்கு எதிராக குரல்கொடுக்க முடியுமானவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு முஸ்லிம் மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் சமூக பற்று இல்லாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலம் எந்த பிரயோசனமும் இல்லாமல்போகும் என்பதை முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.
-எம்.ஆர்.எம்.வசீம்