அரசியல்உள்நாடு

சவால் என தெரிந்தும் களமிறங்கினேன் – நான் டீலர் அல்ல லீடர் – மனோ கணேசன்

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அரும்பாடுபட்டே கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டது. அதனை நாம் பாதுகாக்க வேண்டும். எனவே, ஆளுமையுள்ள இளம் அரசியல் தலைவரான பாரத் அருள்சாமியை ஆதரித்து பாராளுமன்றம் அனுப்பிவையுங்கள் – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் பாரத் அருள்சாமியை ஆதரித்து கண்டி மஹியாவ மற்றும் குயின்ஸ் விருந்தகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘கண்டியில் எமக்கு எதிராக அன்று வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள் ஓடி ஒளிந்துக்கொண்டிருக்கின்றனர். இதனைத்தார் கர்மவினையென்பார்கள்.

நான் டீலர் அல்லர், லீடர். அதனால்தான் சவால் என தெரிந்தும் கண்டியில் களமிறங்கினேன். இன்றும் களத்தில் உள்ளேன்.

எனது கரங்கள் கறைபடியாத கரங்கள். எனவே கள்வர்கள் பட்டியலில் என்னையும் இணைக்க வேண்டாம் என அநுர தரப்பிடம் வலியுறுத்துகின்றோம்.

225 பேரும் கள்வர்கள் எனக் கூறுபவர்களும் இதனை புரிந்துகொள்ள வேண்டும். ராஜபக்ச தரப்புடன் என்னை போன்றவர்களை ஒப்பிட வேண்டாம்.

பொதுத்தேர்தல் என்பது நமக்கான தேர்தல், நமது பிரதிநிதித்துவம் என்பது மிக முக்கியம்.

ஒரு இளம் வேட்பாளராக, ஆளுமையுள்ள அரசியல்வாதியாக நாம் பாரத் அருள்சாமியை கண்டி மாவட்டத்தில் களமிறக்கியுள்ளோம்.

நாம் ஐக்கிய மக்கள் சக்தியினர் அல்ல, ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிகள்.

எனவே, எமக்கான தனித்துவமும் உள்ளது. எனவே, ரவூப் ஹக்கீம், பாரத் அருள்சாமி போன்ற தமிழ் பேசும் அரசியல்வாதிகளின் வெற்றி மிக முக்கியம்.

கண்டியில் பாரத் மற்றும் ஹக்கீமுக்கு வழங்கும் மனோவுக்கு வழங்கப்படும் வாக்குகளாக நினைத்துக்கொள்ளுங்கள்.

தம்பி பாரத் சட்டத்தரணி, அரசியல் ஆளுமை மற்றும் நிதானம் உள்ளது. கட்சி தலைமை மற்றும் கொள்கைமீது உறுதியாக உள்ளார்.” என்றார்.

-கிரிஷாந்தன்

Related posts

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

மேலும் இரண்டு வாரங்களுக்கு ஆன்டிஜென் பரிசோதனை

கொவிட் 19 – தொடர்ந்தும் 659 பேர் சிகிச்சையில்