அரசியல்உள்நாடு

தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிய மனுவிற்கு திகதியிடப்பட்டது

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நவம்பர் மாதம் 4ஆம் திகதி அழைப்பதற்கு உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

இந்த மனு இன்று (24) உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மனு தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின் இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு நீதியரசர் உத்தரவிட்டார்.

அதற்கும் ஆட்சேபனைகள் இருப்பின் நவம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர் அதனை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் இலங்கை தேசிய அமைப்பின்” அழைப்பாளருமான எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான திகதி ஒக்டோபர் 04 முதல் ஒக்டோபர் 11 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் கூறுகிறார்.

தேர்தல் சட்டத்தின்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும், ஏழு வாரங்களுக்கு மிகையாகமலும் வாக்குப்பதிவுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என மனுதார் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வேட்புமனு ஏற்கும் பணி முடிவடைந்த ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் ஐந்து வார காலம் நவம்பர் 15ஆம் திகதியும் , ஏழு வார காலம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் மாதம் 14ஆம் திகதி, அந்த சட்டப்பூர்வ காலத்திற்குள் உள்ளடக்கப்படாததால், அன்றைய தினம் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

கல்வியமைச்சரை சந்திக்கவுள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்கள்

35 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு