அரசியல்உள்நாடு

நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கான சிரமதான நாள் – ஜனாதிபதி அநுர

நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறப்போவது ஒரு தேர்தல் அல்ல, சுத்தம் செய்வதற்கான பாரிய சிரமதானமாகும். நவம்பர் 14 ஆம் திகதி என்பது இலங்கையில் பாராளுமன்றத்தை சுத்தம் செய்தவற்கான சிரமதானம் நடத்தப்படுகின்ற நாளாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பொலநறுவையில் புதன்கிழமை (23) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,

பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைமழையில் நனைந்துகொண்டு பொலநறுவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கான கூட்டத்தை நடத்துகிறார்கள். மக்களிடமிருந்து பிரதிபலிக்கின்ற எதிர்பார்ப்பு, நோக்கம் மற்றும் திடசங்கற்பம் நவம்பர் 14 ஆம் திகதி தனிச்சிறப்பு வாய்ந்த வெற்றியை பொலநறுவையில் இருந்து பெற்றுக்கொடுப்பதையே வெளிக்காட்டுகிறது.

பொலநறுவை மாவட்டத்தை உள்ளிட் இந்நாட்டு மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டை புதிய திசைக்கு அனுப்பி வைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்கள். நாட்டில் இயல்புநிலையை பேணிவந்து மக்களுக்கு அவசியமான நிவாரணங்களையும் நாட்டைக் கட்டியெழுப்ப அவசியமான திட்டங்களையும் வகுத்துக்கொண்டு மூவரைக் கொண்ட அமைச்சரவை இயங்கிவருகிறது.

நவம்பர் 14 ஆம் திகதிய வெற்றிக்குப் பின்னர் படிப்படியாக நாட்டைக் கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள கொள்கை வெளியீட்டை நடைமுறைப்படுத்துவோம் என்பதை நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். ஜனாதிபதித் தேர்தல் மேடையில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இருந்த பாசறையில் இருந்து என்ன கோரினார்கள்? பௌத்த பிக்குமார்களுக்கு அன்னதானம் கிடைக்கமாட்டாது, பௌர்ணமி தினத்தை இல்லாதொழிப்பதை உள்ளிட்ட பல விடயங்களை கூறினார்கள். அவையனைத்துமே பொய்யான புனைகதைகள் என்பது கடந்த ஒரு மாத காலத்துக்குள் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு தற்போது ஒரு கூட்டத்தைக் கூட நடத்த முடியாமல் போயுள்ளது. மக்கள் பொய்யை கேட்டுக்கொண்டிருக்க தயாரில்லை என்பதால் அவர்களின் கூறை கூறல்களுக்குள்ளேயே அவர்கள் சிறைக் கைதிகளாக மாறியுள்ளார்கள்.

இந்த பொதுத் தேர்தல் எந்தவிதமான போட்டியும் இல்லாமல் சோர்ந்துபோன ஒரு தேர்தல் என சிலர் கூறுகிறார்கள். எனினும், இந்த தேர்தலில் இலங்கை வரலாற்றின் மிகவும் தனித்துவமான வெற்றியை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுப்பது உறுதியானதாகும்.

கடந்த பாராளுமன்றம் பற்றி மக்கள் மத்தியில் எதிர்ப்பே நிலவியது. தங்கக் கட்டிகளை கடத்தி வந்து சுங்கத்தில் அகப்பட்டவர்கள் அண்மையில் பாராளுமன்றத்திற்கு வந்து கையை உயர்த்தினார்கள். அதைப்போலவே, அங்குமிங்கும் கட்சிதாவி இறுதியில் எங்கே இருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ள முடியாத திரிபு நிலை உருவாகியிருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக பாடசாலைப் பிள்ளைகள் பாராளுமன்றம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தளவிற்கு அருவருப்பு நிலைக்கு உள்ளாகியிருந்த பாராளுமன்றத்தைக் கலைத்து மக்களுக்கு வாய்ப்பினை வழங்கியிருக்கின்றோம்.

நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறப்போவது ஒரு தேர்தல் அல்ல, சுத்தம் செய்வதற்கான பாரிய சிரமதானமாகும். நவம்பர் 14 ஆம் திகதி என்பது இலங்கையில் பாராளுமன்றத்தை சுத்தம் செய்தவற்கான சிரமதானம் நடத்தப்படுகின்ற நாளாகும். பொலநறுவையிலும் தன்னிச்சையாகவே சுத்தம் செய்துகொள்ள விரும்பியவர்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை.

எஞ்சியுள்ளவர்களை சுத்தம் செய்வதற்காக பொலநறுவை மாவட்ட மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள கடமைப் பங்கினை தன்னிச்சையாகவே பொறுப்பேற்க வேண்டும். பொலநறுவைக்கு தலைமைத்துவம் வழங்கக் கூடிய, ஊழலற்ற, நேர்மையான குழுவினரை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். அதைப்போலவே, அங்குமிங்கும் கட்சித்தாவாத, விலைபோகாத குழுவினரை நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.

அப்படியானால் நவம்பர் 14 ஆம் திகதி திசைகாட்டியின் குழுவினரைக் கொண்டு பாராளுமன்றத்தை நிரப்ப வேண்டும். நாங்கள் அவ்வாறு கூறும்போது மற்றுமொரு கும்பல் பலம்பொருந்திய எதிர்க்கட்சியை அமைத்துக்கொள்வதற்காக அழைப்பு விடுக்கிறார்கள். அது அப்படியல்ல. இந்த நேரத்தில் பலம்பொருந்திய அரசாங்கமொன்றே இருக்க வேண்டும்.

அதற்கான பணியை நாங்கள் ஆற்றவேண்டும். கட்டம் கட்டமாக நாட்டை உறுதிநிலைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து அமுலாக்க வேண்டும். அதன்பொருட்டு குறிப்பாக பொலநறுவை மாவட்டத்துடன் சம்பந்தப்பட்ட அரிசியாலை உரிமையாளர்களுடன் புரிந்துணர்வுடன் செயலாற்ற நாங்கள் தயார் என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தோம். அதற்கு உடன்படாவிட்டால் சட்டப்படி செயலாற்றவும் தயார் என்பதையும் கூறியிருக்கிறோம்.

சுற்றுலா தொழில்துறைக்கு அவசியமான அரிசியைத் தவிர ஒரு அரிசி மணியைக் கூட நாங்கள் இறக்குமதி செய்யமாட்டோம். கமக்காரர்களுக்கு பலம்பொருந்திய வறுமான வழிவகை கிடைக்கின்ற வகையில் விவசாயத்துறையில் நிலைமாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்.

அதைப்போலவே, ஓய்வூதியம் பெறுநர்களுக்கு அஸ்வெசும பயனாளிகளுக்கு, பாடசாலை பிள்ளைகளுக்கு கொடுப்பனவினை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டங்களை வகுத்து அரச சேவையை வினைத்திறன் கொண்டதாக மாற்றியமைக்க இலங்கையில் முதல் தடவையாக கட்டியெழுப்பப்பட்டுள்ள மக்கள் நேயமுள்ள அரசாங்கம் செயலாற்றி வருகின்றது. இந்த நாட்டையும் மக்களையும் முதன்மைப்படுத்தி வைத்துக்கொள்வதற்காகவே நாங்கள் எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்போம். எங்களுடைய தனிப்பட்ட தேவைக்காக எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்க மாட்டோம்.

அதனால், தோல்விகண்ட கும்பல்கள் கலவரமடைந்து அவர்களின் ஒட்டுமொத்த அரசியலையுமே கொழும்பில் நடாத்தப்படுகின்ற ஊடக சந்திப்புகளுக்கு மட்டுப்படுத்தி இருக்கிறார்கள். அந்த கதைகள் அனைத்துமே மனவேதனைகளின் வெளிப்பாடு ஆகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு வாக்குகளை அளித்தவர்களைவிட அதிகமான எண்ணிக்கை கொண்டவர்கள் பொதுத் தேர்தலில் வாக்குகளை அளிக்க அணிதிரண்டு இருக்கிறார்கள். நாள்தோறும் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைத்து மக்கள் குழுமி வருகிறார்கள். தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக முன்வைத்த காலை பின்வைக்க மாட்டாது என்பதை வலியுறுத்துகிறேன்.

வறுமையின், நிர்க்கதி நிலையின் அடித்தளத்திற்கே வீழ்ந்துள்ள நாட்டை அதிலிருந்து மீட்டெடுத்து முன்நோக்கி நகர்த்துவதற்காக புத்திஜீவிகளும் தொழில்வாண்மையாளர்களும் பெருமளவில் தன்னிச்சையாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தமது பணிகளை ஈடேற்றிக் கொள்வதற்காக அரசாங்க அலுவலகங்களில் வரிசைகளில் காத்துக்கொண்டிராமல் அனைத்தையும் டிஜிட்டல்மயமாக்கி வினைத்திறனுடன் ஈடேற்றிக் கொடுப்போம். வெளிநாடொன்றில் கோடிக்கணக்கான ரூபா சம்பளம் பெற்ற டிஜிட்டல் துறையைச் சேர்ந்த முதன்மை புத்திஜீவியொருவர் தன்னிச்சையாகவே நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு பங்களிப்புச் செய்வதற்கான இன்னும் சில வாரங்களில் நாட்டுக்கு வருகைத்தரவுள்ளார்.

ஊழல்பேர்வழிகளுக்கு, மோசடிப்பேர்வழிகளுக்கு தண்டனை வழங்குவது ஒரு ‘வொய்ஸ் கற்’ நாடகமல்ல. இப்பொழுது பல வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. என்றாலும் “வொய்ஸ் கற்” கிடைக்காது. மூடப்பட்டிருந்த பல கோப்புகள் திறக்கப்பட்டு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. கள்வர்களைப் போல் சம்பந்தபட்டவர்கள் பதற்றமடைந்திருக்கிறார்கள்.

அதற்காக மேலும் வலிமையும் பலமும் கொண்ட பாராளுமன்றத்தை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். மக்களின் பக்கத்தில் உழைத்த பொலநறுவை மாட்டத்தின் மக்களுக்கு அறிமுகமான ஒரு குழுவினரை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். ஔடத தீத்தொழில் சம்பந்தமாக கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கெஹெலிய ரம்புக்வெல்லவை பாதுகாப்பதற்காக வாக்களித்தார்கள்.

பிணைமுறி மோசடி சம்பந்தமாக அப்போதிருந்த நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட வேளையிலும் அந்த நிதியமைச்சரை பாதுகாத்துக் கொள்வதற்காக வாக்குகளை அளித்தார்கள். கடந்த பாராளுமன்றத்தில் எல்லா சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு எதிராகவே கையை உயர்த்தியிருக்கிறார்கள்.

இரசாயன உரம் தடைசெய்யப்பட்டதை நிறுத்துமாறு கமக்காரர்கள் குரலெழுப்பிய வேளையில் அமைச்சரவையும் பாராளுமன்றத்தின் ஆளுந்தரப்பு பிரதிநிதிகளும் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டார்கள். இந்த தேர்தல் சற்று சோர்வானது போல இருந்தாலும் அனைவரும் நவம்பர் 14 ஆம் திகதி வரை வீடு வீடாகச் சென்று பலம்பொருந்திய பாராளுமன்றமொன்றை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுக்க அயராது உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

நாடளாவிய ரீதியாக பல பகுதிகளில் மின்தடை

நாரஹேன்பிட்டியின் ஒரு பகுதி முடக்கம்