2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினங்களாக ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் 3ஆம் திகதிகள் கருதப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் சனிக்கிழமை தபால் நிலையத்திற்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
“நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் பொதுத்தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்காளர் அட்டைகளை வழங்கும் பணிகள் இன்று இடம்பெற்று வருகின்றன.
தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை 759,210 ஆகும். அவற்றில் 21,160 நிராகரிக்கப்பட்டன. இதன்படி 738,050 பேருக்கு தபால் மூல வாக்களிப்பிற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பாகும்” என்றார்.