மறு அறிவித்தல் வரை அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறும், அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாகவும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், பயண ஆலோசனை ஒன்றை வௌியிட்டுள்ள அமெரிக்க தூதரகம், சந்தேகப்படும்படியான எதைக் கண்டாலும் 119 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் அவதானம் செலுத்தி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய இராச்சியம் இலங்கையில் உள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.