அரசியல்உள்நாடு

IMF வரி சூத்திரத்தை தற்போதைய அரசாங்கம் மாற்ற வேண்டும் – சஜித்

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் மக்களின் சுமையை குறைக்கும் புதிய உடன்படிக்கைக்கு தற்போதைய அரசாங்கம் செல்ல வேண்டும். இவ்வாறான உடன்படிக்கையின் மூலம் மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமைகள் தளர்த்தப்பட்டு அதன் மூலம் வலுவான பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாகும்.

ஆனபடியால் தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து, வரிச்சுமையை குறைக்கும் புதிய ஒப்பந்தத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு தாம் ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரிச்சுமையை குறைக்கும் பயணத்தை மேற்கொள்வதே 42% ஆனோரின் விருப்பத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள தற்போதைய ஜனாதிபதியின் பொறுப்பாகும். இந்த வரிச்சுமையினால் மக்களின் வாழ்வு சீர்குலைந்துள்ளது.

இந்த வரிகளினால் ஒரு நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது. மூளைசாலிகள் வெளியேற்றம் அதிகரித்து காணப்படுகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் நாட்டை விட்டு வெளியேறும் இத்தருணத்தில், இந்த தாங்க முடியாத வரிச்சூத்திரம் திருத்தப்பட்டு சலுகை ரீதியான நிவாரண வரிச்சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி அமைப்பாளர் திருமதி அப்சாரி திலகரத்ன ஏற்பாட்டில் இன்று (16) கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் வாழும் 220 இலட்சம் மக்கள் பல்வேறு கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த சவால்களை முறியடிக்க நான் வழிவகுப்பேன்.
வங்குரோத்து தன்மையால் பொருளாதாரத்தை சுருங்கச் செய்யும் அரச கொள்கையினால் மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து, பணவீக்கம் அதிகரித்து மக்களின் வாழ்க்கை சீரழிந்து போயிருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொருளாதார பொறிமுறை பலவீனமடைந்து, பொருளாதார வளர்ச்சி சுருங்கி இருக்கும் எமது நாடு, 2028 முதல் மீண்டும் கடனை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் செயல்படுவது இங்கு மிகவும் முக்கியமானது. பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இது முக்கியமானது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன் முன்னாள் அரசாங்கம் தேசியக் கடன் மறுசீரமைப்பின் போது மக்கள் மீது அதிக சுமையை ஏற்றி, மக்களுக்கு அழுத்தங்களையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இவ்வாறு மக்களுக்கு ஏற்படுத்திய அசௌகரியங்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியே முன்நின்றது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மக்களுக்கு நிவாரணம் கிடைக்காத காரணத்தினால், முன்னாள் அரசாங்கம் ஏற்படுத்திய உடன்படிக்கையில் திருத்தங்களை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடியுள்ளது.

மக்கள் சார் உடன்படிக்கையை எட்டுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருந்தது. ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகளிலும் நாம் இதனை தெளிவாக குறிப்பிட்டிருந்தோம் என்று சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

வரி விதிப்பு முறை திருத்தப்பட வேண்டும்.

இந்த வரிச் சூத்திரம் உடனடியாகத் திருத்தப்பட்டு, மக்கள் நலன் சார்ந்த நிவாரண வரிச் சூத்திரமொன்றை எட்ட வேண்டும்.

இவ்வருட பொதுத் தேர்தலிலும் IMF உடனான ஒப்பந்தத்தை IMF சட்டகத்திற்குள், மக்கள் சார்பான திருத்தமாக மாற்றியமைத்து முன்னோக்கி செல்வதற்கான கொள்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கும்.

நாட்டு மக்களை வாழ வைக்கும் பொறுப்பு தமக்கு இருக்கிறது, இதற்குத் தேவையான அதிகாரத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் இலவச PCR பரிசோதனை

குளிரூட்டியிலிருந்து வெளியேறிய புகையால் இருவர் உயிரிழப்பு!

குண்டுவெடிப்பு தொடர்பான புலனாய்வுக் கடிதம் தொடர்பில் அநுர அம்பலம்