மலையக மக்களின் சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு திட்டமிட்ட வகையில் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் வட,கிழக்கு பிரதேசங்களை தவிர்ந்த மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே 5 முதல் 6 சிறுபான்மை உறுப்பினர்கள் தெரிவு செய்ய வாய்ப்பு இருக்கின்றது.
கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை போன்ற பகுதிகளில் மலையக தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும் அங்கே எமக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதில் போட்டி நிலவி வருகின்றது.
அதனை சாத்தியப்படுத்துவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி வியூகம் வகுத்து இந்த தேர்தலில் செயல்பட்டு வருகின்றது.
ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு பல்வேறு சதி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
குறிப்பாக பல கோடிகளை இந்த தேர்தலுக்காக கொட்டி கொடுத்து எங்களுடைய சிறுபான்மை மக்களை விலைக்கு வாங்கி சுயேட்சையாகவும், பல சின்னங்களிலும் போட்டியிட வைத்து சிறுபான்மை வாக்குகளை சிதறடிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்கு எங்களுடைய சமூகத்தில் கல்வி கற்ற சிலரும் துணைப்போவது மனதுக்கு வேதனையளிக்கின்றது. கடந்த காலங்களில் இரத்தினபுரி, கண்டி பகுதிகளில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்ட பொழுது அவர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கு யாரும் இருக்கவில்லை. நாம் அவர்களுக்காக குரல் கொடுத்தோம்.
அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்கட்சியாக இருந்தாலும் சரி எமது சமூகத்திற்கான பிரச்சினையாக அதனை நாம் உணர்ந்தோம்.
ஆனால் இன்று நுவரெலியா மாவட்ட பிரதிநிதித்துவத்திற்கும் அந்த நிலையை உருவாக்க ஒரு சிலர் சிறுபான்மை கட்சிகளும், தனவந்தர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
எனவே, நுவரெலியா மாவட்ட மக்கள் சிந்தித்து கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை மனதில் கொண்டு உரியவர்களை தெரிவு செய்ய வேண்டும்.
வெறுமனே, தேர்தல் காலங்களில் வந்து செல்பவர்களையும், தங்களுக்கு யார் என்று தெரியாதவர்களுக்கும் வாக்களித்து விட்டு பின்பு பிரச்சினைகள் ஏற்படுகின்ற பொழுது யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் குழம்புகின்ற ஒரு நிலைமை ஏற்படும்.
எனவே சிந்தித்து வாக்களித்து சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.