அரசியல்உள்நாடு

பொதுச் சொத்துக்கள், சமூகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அநுர

பொதுமக்களின் செல்வங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஜனாதிபதியைப் போன்றே அனைத்து அரச அதிகாரிகளுக்கும் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சில் இன்று (15) முற்பகல் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

ஏனைய நாடுகளில் வலுசக்தித் துறைக்கு உயர்ந்த நிலை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று இலங்கையிலும் வலுசக்தித் துறைக்கு முன்னணி இடம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வலுசக்தி அமைச்சு என்பது நிதி வருமானங்களைப் பெறும் அமைச்சு எனவும், அதிக வருமானம் கிடைக்கும் போது முறைகேடுகள் இடம்பெறலாம் என்ற கருத்து சமூகத்தில் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது விருப்பத்தை எதிர்பார்ப்புடன் பயன்படுத்தியுள்ளதாகவும், அந்த ஆணைக்கு தான் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பழைய அரசியல் கலாசாரத்தின் மீதான எதிர்ப்பு, பிரஜைகள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் அரச சேவையின் செயற்பாடுகள் தொடர்பான பிரஜையின் அதிருப்தி காரணமாக புதிய அரசியல் சம்பிரதாயத்தினை மக்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கு மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயம் என்பனவே காரணமாக அமைந்ததென மக்கள் நம்புவதாகவும், அதனை

தடுப்பதற்காகவே இம்முறை மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அரச பொறிமுறை முழுவதும் பரவியுள்ள மோசடி மற்றும் ஊழலைத் தடுப்பதற்காக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் தான் பாதுகாப்பதாகவும் தெரிவித்தார்.

அரச ஊழியர்களும் தங்களின் பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற தங்களை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

பொதுச் சொத்துக்கள், சமூகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், அந்தச் சொத்துக்களை மோசடி அல்லது ஊழலுக்கு உட்படுத்த எவருக்கும் உரிமை இல்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பிரஜைகளை திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன்மிக்க மற்றும் செயற்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதற்கு தற்போதைய அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு அவசியமானது எனவும், அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்த முறை மக்கள் ஆணையின் கட்டமைப்பு, நோக்கம் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரச உத்தியோகத்தர் கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்குரிய அரசியல் தலைமைத்துவத்தை வழங்க தமது தரப்பு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அரச உத்தியோகத்தர் தனது கடமை எல்லைக்குள் மேற்கொள்ளும் மக்கள்நல அனைத்து செயற்பாடுகளுக்கும் தாம் முன் நிற்பதாகவும், செய்யக்கூடாத ஒன்றைச் செய்தால் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

வலுசக்தித் துறையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மற்றும் அடுத்த சில ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் பற்றியும் இதன்போது விரிவான மற்றும் நீண்ட மீளாய்வு நடத்தப்பட்டது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் வலுசக்தித் துறையின் இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்தும், மக்களுக்கு வழங்கக்கூடிய குறுகிய மற்றும் நீண்ட கால நிவாரணங்கள் குறித்தும் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது.

Related posts

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்கு ஹட்சன்

கட்சி உறுப்புரிமையில் இருந்து ரஞ்சன் தற்காலிகமாக இடைநீக்கம்

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைவு