அரசியல்உள்நாடு

நாடு பாரிய ஆபத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

பெரும்பான்மை நம்பிக்கையுடன் கூடிய சஜித் பிரேமதாசவின் தலைமையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு நாட்டு மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் ஒன்றிணைய வேண்டும்.

அவ்வாறு இல்லையானால் நாடு பாரிய ஆபத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளருமாற இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் இன்று(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலகில் பொருளாதார ரீதியில் பலம் வாய்ந்த நாடுகள் பயணித்த பாதையில் இலங்கையும் செல்வதற்குத் தேவையான வேலைத்திட்டம், தொலைநோக்கு மற்றும் சிறந்த அணி எது என்பதை மக்கள் கவனமாக சிந்திக்க வேண்டும்.

இந்த நாட்டில் அரசியல் புரிந்துணர்வுடன் செயற்படும் ஜனாதிபதியும் அரசாங்கமும் உருவாக்கப்பட வேண்டும். நாட்டு மக்கள் உணர்ச்சிகளால் அல்லாது, புத்திசாலித்தனத்தால் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தேர்தல் மேடையில் தெரிவித்திருந்தார். பாராளுமன்றத் தேர்தலில் தகுந்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் அங்கு கூறியிருந்தார்.

தற்போது வலுவான ஆட்சி அமைக்க மக்களின் ஆதரவை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறான நிலையில் நாட்டு மக்கள் உணர்வுவயப்பட்டு செயற்படாமல் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்.

நமது நாட்டு வரலாற்றில் கூடிய அதிகாரம் மேலாதிக்கப் போக்குகளை உருவாக்கியுள்ளது. கூடிய அதிகாரம் ஊழலுக்கு வழிவகுத்துள்ளது.

உலகில், ஜனாதிபதி ஒரு கட்சியையும், பிரதிநிதிகள் சபை மற்றொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பிரான்சின் ஜனாதிபதி ஒரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியே பெரும்பான்மை பலத்தை கைப்பற்றியது. அமெரிக்காவில் ஜனாதிபதி ஒரு கட்சியையும், பிரதிநிதிகள் சபை மற்றொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

அந்த நாடுகளின் ஆட்சியில் சமநிலையையும் சமநிலையையும் காண முடிகிறது. இந்நாடுகளில் காணப்படும் ஆட்சியில் அதிகாரங்களுக்கிடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளை காண முடிகிறது.

இந்த பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைக் கொண்ட அரசாங்கத்தை தெரிவு செய்வது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது என நம்புகிறோம். இது நாட்டின் ஜனநாயகத்திற்கும் முக்கியமான விடயமாகும். இத்தகைய முடிவினால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படாது. சட்டத்தின் ஆட்சி செயல்படுவதற்கும் இது ஒரு காரணமாக அமையும்.

ஐக்கிய மக்கள் சக்தி சமூக ஜனநாயக நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி முற்போக்கான கட்சியாகும். மேலும், இன்று உலகம் தீவிர சோசலிஸ போக்கை நிராகரித்துள்ளது. தீவிர வலதுசாரி போக்கையும் இன்று உலகம் நிராகரித்துள்ளது.

தீவிர இடதுசாரி, தீவிர வலதுசாரி போக்குகளை நிராகரித்த நாடுகள்தான் இன்று பொருளாதார ரீதியாக வலுவான நாடுகளாக காணப்படுகின்றன. சீனா, வியட்நாம் உள்ளிட்ட இன்னும் பல நாடுகள் சாத்தியமான பாதையில் பயணிப்பதால் தான் அந்த நாடுகள் இன்று பொருளாதார ரீதியாக வலுப்பெற்றுள்ளன.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் வலையில் நான் சிக்கமாட்டேன் என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ஜனாதிபதியாகும் முன்னர் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் பொருளாதாரத்தை கையாளும் நாடுகள் பொருளாதார ரீதியாக பலம் அடையவில்லை என அப்போது அவர் கூறியிருந்தார்.

ஆனால் எந்தவொரு நிபந்தனையையும் முன்வைக்காமல் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை தொடர்வதற்கு சாதகமான பதிலை வழங்கியுள்ளார். அதிகாரம் கிடைத்த பிறகு, பொறுப்பை உணர்கிறார். ஆழத்தை உணர்கிறார். அதிகாரம் கிடைத்த பெற்ற பிறகு நடைமுறை ரீதியாக நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சர்வதேச நிதி மாதிரி யதார்த்தத்திலிருந்து எம்மால் விலக முடியாது. கோஷங்கள் மூலம் மக்களைத் தூண்டிவிட்டு, பொய்யான விசித்திரக் கதைகளை உருவாக்கி மக்களை ஏமாற்றக் கூடாது.

நாட்டு மக்கள் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்க வேண்டும். கவர்ச்சிகரமான கருத்துக்களுக்கு மயங்காமல் இந்த நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகில் வெற்றி கண்ட நாடுகள் பயணித்த பாதைக்கு எமது நாட்டையும் இட்டுச் செல்ல வேண்டும் என்றார்.

Related posts

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படும்!

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம்!

இன்று மாலை தீர்மானமிக்க சந்திப்பு