அரசியல்உள்நாடு

மக்கள் எதிர்பார்ப்புக்கு அமைவாக புதிய அரசியலமைப்பு – ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (05) முற்பகல் வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

அமரபுர பீடத்தின் செயலாளரும் இதன்போது கலந்துகொண்டிருந்ததோடு, அவர்களால் செத் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு ஆசி வழங்கப்பட்டது.

அதனையடுத்து ஜனாதிபதி தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை எடுத்துக்கூறும் விதமாக மகா சங்கத்தினருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

அதன்போது நாட்டின் வளங்களை கெண்டு உச்சகட்ட பலன்களை அடைந்து வலுவான நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்திய மகாநாயக்க தேரர்கள், அதனால் இலங்கை உலகில் சுயாதீன நாடாக எழுந்து நிற்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

பாராளுமன்ற தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கும் தருணத்தில் அரசியல் ரீதியான அமைதிக் காலம் நிலவுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, செய்ய வேண்டியுள்ள பல்வேறு பணிகளை தேர்தலில் கிடைக்கும் முழுமையான பாராளுமன்ற அதிகாரத்தை கொண்டு துரிதமாக செயற்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலின் போது எவ்வித வன்முறைகளுக்கும் கலவர நிலைமைகளுக்கும் இடமளிக்காமல் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் எடுத்துக்காட்டாக செயலாற்றிமைக்கு மகா சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மதத்தை முன்னிலைப்படுத்தி தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பிரசாரங்களை சிலர் முன்னெடுத்துச் சென்றதாகவும் அவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்பது தற்போது உறுதியாகியுள்ளதாகவும் இதன்போது மகா சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

இருப்பினும் இதுபோன்ற அவதூறு பிரசாரங்கள் எதிர்காலத்திலும் முன்வைக்கப்படலாம் என்பதால் அது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் மகா சங்கத்தினர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினர்.

சம்பிரதாய அரசியல் முறை மாற்றப்பட வேண்டும் என்பது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஊடாக தெரியவந்திருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவதூறுகளால் தமது தரப்பினர் குறித்து தோற்றுவிக்கப்பட்ட விம்பத்தை மக்கள் புறக்கணித்திருப்பதால், அவை அனைத்தும் போலிகள் என்பது உறுதியாகியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது புதிய அரசியலமைப்பு குறித்தும் மகா சங்கத்தினர் ஜனாதிபதியிடம் வினவினர்.

அதன்படி, புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதே தமது நோக்கமாகும் என்றும். நீண்ட கலந்துரையாடல்கள் மற்றும் பொதுமக்கள் வாக்கெடுப்பின் ஊடாக மாத்திரமே அதனை செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும், கடந்த அரசாங்கங்கள் அரசிலமைப்பு திருந்தங்களை தமது தேவைகளுக்கு ஏற்பவே செய்துகொண்டதாகவும், மக்களின் தேவைக்கு ஏற்ப திருத்தங்கள் செய்யப்படவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தி மக்கள் எதிர்பார்ப்புக்கு அமைவாக புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

இஸ்ரேலியரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டம் – நிஹால் தல்துவ

editor

வழக்கிலிருந்து விடுதலையான விமல்!