போலி ஆவணங்களை சமர்ப்பித்து இந் நாட்டு கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தி முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது
இது குறித்த வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான அரச சட்டவாதி, சாட்சிகள் பட்டியலை திருத்த அனுமதி கோரினார்.
மற்றொரு சாட்சியாளரை சாட்சிப் பட்டியலில் உள்ளீர்க்க வேண்டும் என்பதால், வழக்குத் தொடுநருக்குள்ள அதிகாரத்துக்கு அமைய அதற்கான அனுமதியை வழங்குமாறு அவர் கோரினார்.
அதற்கு அனுமதியளித்த நீதிபதி, திருத்தங்களை முன்னெடுக்குமாறு குறிப்பிட்டார்.
இதன்போது பிரதிவாதி டயானா கமகேவுக்காக மன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி சானக ரணசிங்க முன்னிலையானார். வழக்கின் வழக்குப் பொருளாக முன் வைக்கப்பட்டுள்ள பிரதிவாதியின் பிறப்புச் சான்றிதழின், மூல ஆவண கோவையை வழக்கு ஆரம்பமாக முன்னர் தனக்கு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரினார்.
இந் நிலையில் குறித்த கோவை தற்போது இருக்குமிடத்திலிருந்து ஒரு வார காலத்துக்குள் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கட்டளையிட்டார்.
அதன் பின்னர் மேலதிக வழக்கின் முன் விளக்க மாநாடு எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதிக்கும் அவ்வருடத்தின் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பாணந்துறை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் போலியாக தயரைக்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பித்து மோசடியான முறையில் இந்த் நாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் டயானா கமகேவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-எம்.எப்.எம்.பஸீர்