முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.
அப்போது, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அதன்படி, இந்த வழக்கை ஏற்கனவே திட்டமிட்டபடி நவம்பர் மாதம் 29-ம் திகதி விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் தமது தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசி கட்டணத்திற்காக செலுத்தப்பட வேண்டிய 240,000/- ரூபாயை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியை பயன்படுத்தி செலுத்தியமை ஊடாக அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.