அரசியல்உள்நாடு

எனது முதலாவது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் – பிரதமர் ஹரிணி

சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தை கொண்டாடும் இந்த சிறப்பான சந்தர்ப்பத்தில் இலங்கையின் பிரதமர் என்ற வகையிலும் மகளிர், சிறுவர்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையிலும் எனது முதலாவது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய அவரின் சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் வாழ்த்து செய்தியில் மேலும்,

இந்த இரண்டு முக்கியமான நிகழ்வுகளும் எமது சமூகத்தின் எதிர்காலத்தையும் பாரம்பரியத்தையும் வடிவமைப்பதில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வகிக்கும் முக்கிய வகிபாகங்களை எமக்கு நினைவூட்டுகின்றன.

இவ்வருட சர்வதேச சிறுவர் தின கருப்பொருள் “எமது எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது எமது சிறுவர்களில் முதலீடு செய்வது” என்பதாகும். இது வெறுமனே ஒரு சுலோகம் மட்டுமல்ல – இது எமது அரசாங்கத்தின் முக்கிய கோட்பாடு மற்றும் கொள்கை திசைவழியை உள்ளடக்கியதாகும்.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் பயனளிக்கும் உயர்தரமான, பொதுக் கல்வி முறைமையை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். பொருளாதார வரையறைகள் என்ற சுமைகளிலிருந்து விடுபட்டு, வாய்ப்புகள் நிறைந்த உலகில் அவர்கள் செழித்தோங்குவதற்குத் தேவையான வசதி வாய்ப்புகளுடன் சிறுவர்களை வளப்படுத்துவதே எமது தொலைநோக்காகும்.

மேலும், சிறுவர்கள் மீது, குறிப்பாக கல்வி நிறுவனங்களுக்குள் இடம்பெறும் அனைத்து வகையான உடல் மற்றும் உளரீதியான துஷ்பிரயோகங்களையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். சிறுவர்கள் பரிவு, பராமரிப்பு, அன்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த சூழலில் வளர வேண்டியவர்கள் – ஆரோக்கியமற்ற போட்டியின் அழுத்தத்தின் கீழ் அல்ல.

கனிவு, புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம், நியாயமான மற்றும் சமமான எதிர்காலத்தை கட்டியெழுப்பும் திறன்கொண்ட ஒரு தலைமுறையை நாம் உருவாக்க முடியும். சிறுவர்கள் பற்றிய ஒவ்வொரு தீர்மானத்திலும் அவர்களின் சிறந்த நலன்கள் எப்போதும் எங்கள் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.

முதியோர் தினத்தை நாம் கொண்டாடுகின்றோம் என்ற வகையில், நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றியவர்களை நாம் கௌரவிக்கிறோம். 2024 ஆம் ஆண்டின் முதியோர் தின கருப்பொருளான “கண்ணியத்துடன் முதுமை: உலகளவில் முதியோர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவு முறைமைகளை பலப்படுத்துவதன் முக்கியத்துவம்,” என்பது முதியோர்களுக்கான சமூகப் பாதுகாப்பையும் அரவணைப்பையும் மேம்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

முதியோர்களுக்கான, குறிப்பாக தொழிற் படைக்கு பங்களிப்பதில் தங்கள் வாழ்நாளை செலவிட்டவர்களுக்கான ஓய்வூதிய நன்மைகளை மேம்படுத்துவதற்கும், சுகாதாரப் பராமரிப்பிற்கான இலவச மற்றும் சமமான வாய்ப்பினை உறுதி செய்வதற்கும் எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு செழிப்பான தேசத்தையும் அழகிய வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கான எமது பயணத்தில், எமது சிறுவர்கள் மற்றும் முதியோர்களின் நல்வாழ்வுக்காக உழைப்பதில் கைகோர்ப்போம். என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாருக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதை அறிவித்த மெல்கம் கர்தினால்!

இன்றும் 1,631 பேருக்கு கொரோனா தொற்று

அரச ஊழியர்களுக்கு வெள்ளியன்று விடுமுறை