அரசியல்உள்நாடு

ஊழல் மோசடியுடன் தொடர்புள்ள எவரையும் இணைத்துக்கொள்ள மாட்டோம் – ரஞ்சித் மத்தும பண்டார

இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே பாேட்டியிட இருக்கிறோம். ஊழல் மோசடியுடன் தொடர்புபட்ட எவரையும் எமது கூட்டணியில் இணைத்துக்கொள்வதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி எவ்வாறு போட்டியிடுவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மக்கள் 56இலட்சம் வாக்குகளை வழங்கியுள்ளபோதும் அதற்கு எதிராக ஏனைய அனைத்து கட்சிகளுக்கும் 77இலட்சம் வாக்குகளை மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.

அவ்வாறான நிலைமையிலேயே தற்போது ஐக்கிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஐக்கிய மக்கள் கூட்டணி அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் எமது கூட்டணியில் இணைந்துகொள்ளாத பலர் பொதுத் தேர்தலில் இணைந்துகொள்ள இருக்கின்றனர்.ஆனால் ஊழல் மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் யாரையும் எமது கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்போவதில்லை. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

மேலும் காலிமுகத்திடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி ஊடக களியாட்டம் ஒன்றை காட்டி வருகிறது. 2005 மற்றும் 2019 இலும் காலிமுகத்திடலில் வாகனங்கள் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இது புதிய விடயமல்ல. ஆனால் மக்கள் விடுதலை முன்னணியிடமிருந்து மக்கள் புதிய மாற்றத்தையே எதிர்பார்க்கின்றனர்.

அதேநேரம் இந்த வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்யப்போகிறதா அல்லது வேறு தேவைக்கு பயன்படுத்தப்போகிறதா என நாங்கள் கேட்கிறோம். ஏனெனில் அரசாங்கத்தில் 3 அமைச்சர்களே இருக்கின்றனர். அமைச்சின் செயலாளர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் வரையறுத்தே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் இந்த நியமனங்கள் அனைத்தும் வழங்கப்பட்டால் இருக்கும் வாகனங்களுக்கு என்ன நடக்கும் என்பதை மக்களுக்கு தெரிந்துகொள்ள முடியும்.

அத்துடன் ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வுகாண்பதாக தெரிவித்தார்கள். அதேபோன்று அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் தற்போது இந்த விடயம் தொடர்பில் பகுப்பாய்வு செய்யவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

அதேபோன்று ஜனாதிபதியின் நியமனங்கள் தொடர்பில் தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுபவர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதனால் அரசாங்கத்தின் எதிர்கால பயணத்தை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

கொழும்பு மாவட்டத்தில் இரு பிரிவுகள் முடக்கம்

சர்வகட்சி அரசுக்கு சுதந்திர கட்சி பச்சைக்கொடி

இஸ்ரேல் தான் எங்களின் முதல் இலக்கு – ஹமாஸ் அமைப்பின் கமாண்டர்.