அரசியல்உள்நாடு

மாற்றம் ஏற்படுவது நல்லது – பிரசன்ன ரணதுங்க

பாராளுமன்ற தேர்தலில் இணைந்துபோட்டிடுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளுக்கிடையில் இடம்பெறும் கலந்துரையாடலில் நாங்கள் இல்லை.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் இடதுசாரி கொள்கையுடவர்களை இணைத்துக்கொண்டு பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைப்பதற்கே முயற்சிக்கிறோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று வாக்களித்து புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்திருக்கின்றனர்.

தொடர்ந்து ஒரே தரப்பினர் அதிகாரத்தில் இருப்பதைவிட இவ்வாறு மாற்றம் ஏற்படுவது நல்லது. அதனால் மக்கள் ஆணைக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். என்னை பொறுத்தவரை நான் 40 வருடமாக அரசியலில் இருந்து வருகிறேன்.

அதனால் நாங்கள் எதிர்க்கட்சியிலும் இருந்துள்ளோம். ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி இருக்கிறது. அதனை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதில்லை என அறிவித்திருக்கிறார். அதனால் அவரை பிரதமர் வேட்பாளராக்குவது தொடர்பில் நாங்கள் அவருடன் கலந்துரையாடவில்லை.

என்றாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் இடதுசாரி கொள்கையுடைய கட்சிகளை இணைத்துக்கொண்டு பரந்துபட்ட கூட்டணி அமைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கே கலந்துரையாடி வருகிறோம்.

அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றன. அந்த கலந்துரையாடல்களில் நாங்கள் இல்லை. அவர்கள் இரண்டு தரப்பினரும் ஒன்றாக இருந்தவர்கள். அதனால் அவர்கள் ஒன்றாக இணைந்துபோட்டியிடலாம். ஐக்கிய மக்கள் சக்தி என்பது தாராளவாத முதலாளித்துவ கொள்கையுடைய கட்சி.

அதனால் அந்த கட்சியுடன் எங்களுக்கு இணைந்து செயற்பட முடியாது. எமது அரசியல் நிலைப்பாட்டுடன் இணைந்து செயற்பட முடியுமான குழுவொன்று இருக்கிறது. அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கே நாங்கள் முயற்சிக்கிறோம் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

மேலும் 376 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

நாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்குச் சட்டம் அமுலில்

இலங்கையின் உணவு நெருக்கடி குறித்து எச்சரிக்கை