ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் குறித்த அமைச்சரவை நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவானதைத் தொடர்ந்து, பாராளுமன்றில் ஏற்பட்ட வெற்றிடத்திற்காக லக்ஷ்மன் நிபுணராச்சியின் பெயர் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
அதற்கமைய, தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரை மேற்படி அமைச்சரவை அமைச்சர்களின் பணிகள் தொடரும்.
எனினும், அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமைச்சரவையைக் கூட்டி பாராளுமன்றத் தேர்தலுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ததன் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், மேலும் பல புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதன்படி, தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இன்று நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.