பொருளாதாரத்தை மீதப்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தப்போவதாகக் கூறும் தேசிய மக்கள் சக்தி, தங்களது அரசியல் மேடைகளுக்காக கோடிக்கணக்கான ரூபாக்களை செலவிடுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, களுத்துறை மாவட்டத்தின் பேருவளை, தர்கா நகர், அடுழுகமை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களில் (12) இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;
“கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறினோம். சிலர் எங்களை நம்பாது அவருக்கு வாக்களித்தனர். பிரதேச சபையில் உறுப்பினராகக் கூட இருக்காத அவரால், திறமையாக ஆட்சி செய்ய முடியாமல் போனது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் போராட்டம் வெடித்தது. ஆட்சியைப் பாரமெடுக்குமாறு சஜித் பிரேமதாசவுக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஆனாலும், கோட்டாபயவின் தலைமையில், பிரதமர் பதவியை பாரமேற்க முடியாதென சஜித் மறுத்துவிட்டார். அவரின் அணியிலிருந்த பங்காளிக் கட்சிகளையும் கலந்தாலோசித்துத்தான்,சஜித் இந்த முடிவை எடுத்தார்.
ரணில் விக்ரமசிங்க யாரையாவது கலந்தாலோசிப்பதற்கு அவரிடம் எம்.பிக்களோ அல்லது பங்காளிக் கட்சிகளோ இருக்கவில்லை. தனியாக இருந்த அவர், தனியாகச் சென்று ஆட்சியைப் பாரமெடுத்தார். இந்தியா வழங்கிய 04 பில்லியன் டொலர் நிதியைக்கொண்டு வரிசையை முடித்து வைத்தார். ஆனாலும், வீசா மோசடி மற்றும் புற்றுநோய் மருந்து மோசடி உள்ளிட்ட மிகப்பெரிய மோசடிகளை ரணிலால் தடுக்க முடியவில்லை.
நாட்டின் சுதந்திரத்துக்குப் பின்னர் நடந்த பாரிய மோசடிதான் வீசா விவகாரம். ஐம்பதாயிரம் கோடி ரூபாவை அமைச்சர்கள் சுருட்டிக்கொள்வதற்கு உதவியவர் ரணில். இவரால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்கவே முடியாது.
மற்றொருபுறமாக தேசிய மக்கள் சக்தி, மக்களின் ஆணைகளைக் கோருகிறது. ஊழலை ஓழிக்கப் போகிறார்களாம். கள்வர்களைக் கைது செய்யப் போகிறார்களாம். எம்.பிக்களின் ஓய்வூதியமான 18,000 ரூபாவை நிறுத்தப் போகிறார்களாம். நாங்கள் கேட்கிறோம். நிறைவேற்றதிகார ஜனாதிபதியால்தான், கள்வர்களைப் பிடிக்க முடியுமா? பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் நாட்டில் ஏன் உள்ளன? கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஊழலை யார் பிடித்தது? மக்களே பிடித்தனர். வீசா மோசடியை பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், சுமந்திரன் மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரே நீதிமன்றத்தில் வழக்காடி நிறுத்தினர்.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழுவிலுள்ள 28 பேரில், ஒரு முஸ்லிமோ அல்லது தமிழரோ இல்லை. இதுதான், இவர்களின் மனநிலை. மாற்றம் ஒன்றுக்காக மக்களைப் பலிக்கடாக்களாக்க முடியாது.
ஐக்கிய மக்கள் சக்தியில் சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் உள்ளன. ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரட்ன, ரவூப் ஹக்கீம் மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உள்ளிட்ட பலர் எம்முடனே உள்ளனர். நம்பிக்கையோடு சஜித் பிரேமதாசவுக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார்.
-ஊடகப்பிரிவு