அரசியல்உள்நாடு

இயலாமையில் உள்ள ரணிலும் அநுரவும் தற்பொழுது அரசியல் தேனிலவில் – சஜித்

வேட்பாளர் அனுவுக்குமார திசாநாயக்க பொறாமை, வைராக்கியம், குரோதம் மற்றும் இயலாமை என்பனவற்றை காரணமாக கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். தற்பொழுது அனுராவும் ரணிலும் இணைந்து ஜோடியாக மாறி இருக்கின்றார்கள்.

இவர்கள் இருவரும் அரசியல் திருமணம் முடித்திருக்கின்றார்கள். இது அவர்களுடைய அரசியல் தேன்நிலவு காலம். செப்டம்பர் 21 ஆம் திகதியோடு அவர்களுடைய அரசியல் தேனிலவு நிறைவுக்கு வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 48 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 12 ஆம் திகதி தலவத்துகொடையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவில் காணப்படுகின்ற சிறந்த கல்வி முறையின் ஊடாக ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களின் ஊடாக அதிக வருமானத்தை பெறுகின்ற நடுத்தர வர்க்கம் ஒன்று இந்தியாவில் உருவாகி இருக்கின்றது.

அந்த அடிப்படையில் பயணித்து ஐக்கிய மக்கள் சக்தியும் எமது நாட்டில் அப்படியான கல்வி நிறுவனங்களை உருவாக்கும். அதன் ஊடாக அறிவாளிகளையும் புத்திஜீவிகளையும் உருவாக்குகின்ற கல்வி மையமாக மாற்றுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவோம். எமது நாட்டை தகவல் தொழில்நுட்ப மையத்தின் சொர்க்கபுரியாக மாற்றி, அறிவாளிகளையும் புத்திஜீவிகளையும் உருவாக்குகின்ற மத்திய நிலையமாக்குவோம்.

இதன் ஊடாக அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றி, சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் இருந்து பல்கலைக்கழகம் வரையும் இந்த கல்வி வசதிகளை ஏற்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கல்வித்துறையில் மாற்றங்கள் தேவை.

ஐக்கிய நாடுகளின் தரவுகளுக்கு அமைய தகவல் தொழில்நுட்பக் கல்வியை சிறு வயது முதலே கற்பிக்க வேண்டும். எமது நாட்டில் இந்த கல்வி 6 ஆம் தரத்தில் இருந்தே ஆரம்பிக்கப்படுகிறது.

அதுவும் தாய் மொழியிலே கற்பிக்கப்படுகின்றது. எனவே கல்வித் துறையில் சிறந்த மாற்றம் ஒன்று தேவை. இலவச கல்வியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இலவச கல்வியை பலப்படுத்தி நவீன மயப்படுத்துவோம். ஆங்கில மொழியை மையப்படுத்திய கல்வியை எமது நாட்டு கல்வித்துறைக்குள் புகுத்துவோம். தகவல் தொழில்நுட்பக் கல்வியை 1- 13 வரையான வகுப்புகளுக்கு ஆங்கில மொழியில் கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

போலி புரட்சியாளர்களினால் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களை கொண்டு வருகின்ற போது புரட்சிகளை மேற்கொள்ள முயற்சிக்க முடியும். தற்பொழுது ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மோதல்களினால் மூடப்பட்டிருக்கின்றது. இலவசக் கல்வியை மேம்படுத்துகின்ற இந்த புரட்சிகரமான வேலைத்திட்டத்திற்கு எவர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை நிறைவேற்றுவோம்.

வங்குரோத்து தன்மையிலிருந்து சரியான முறையிலேயே மீட்சி பெற வேண்டும். அதற்காக ஏற்றுமதித் துறையை அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலவசக் கல்வி நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும். சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளில் சகல வசதிகளும் நவீன தொழில் நுட்ப வசதியும் காணப்பட்டாலும் இலவசக் கல்வி மேம்படுத்தப்படவில்லை.

அறிவை மையமாகக் கொண்ட பொருளாதார என்கின்ற வார்த்தையின் அர்த்தத்தை எமது நாட்டில் முறையாக நடைமுறைப்படுத்துவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

MSC Messina கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

ரோஹித்த போகொல்லாகம இராஜினாமா