அரசியல்உள்நாடு

அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு அனுர, சஜித்துக்கு அழைப்பு விடுத்தோம் – ஓடி ஒளிந்தார்கள் – மஹிந்த

நாட்டை பிளவுப்படுத்தாமல், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாப்பதாக வெளிப்படையாக குறிப்பிடும் தற்றுணிபு எமது  ஜனாதிபதி வேட்பாளருக்கே உண்டு. நாட்டின் ஒருமைப்பாட்டை நாமல் ராஜபக்ஷவால் மாத்திரமே பாதுகாக்க முடியும். தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்டுள்ள முற்போக்கான மக்கள் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும். அரசியலுக்காக கொள்கைகளை காட்டிக் கொடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெலியத்தை நகரில் புதன்கிழமை (11) மாலை  இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இன்று எழுச்சிப் பெற்றுள்ளது. வைராக்கிய அரசியல் இல்லாத நாட்டை முன்னேற்றும் பொறுப்பு எமக்கு மாத்திரமே உள்ளது. சிறந்த தரப்பினர் எம்முடன் உள்ளார்கள். விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணைவார்கள்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது. 30 வருட கால யுத்தத்தால் நாடு பின்னோக்கிச் சென்றது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்தோம். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினோம். நாடு முன்னேற்றமடையும் போது 2015 ஆம் ஆண்டு அரசியல் சூழ்ச்சியினால் தோற்கடிக்கப்பட்டோம். இந்த  அரசியல் சூழ்ச்சி இன்றும் முடிவடையவில்லை.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர பல்வேறு வழிகளில் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

நல்லாட்சி அரசாங்கம் எமது அரசாங்கம் பெற்ற கடன்களை  நான்கு மடங்கு கடன்களை பெற்றது. பெற்றுக் கொண்ட கடன்கள் செலுத்தப்படவில்லை. அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய பதவி வகித்தவர்கள் இன்று அதிகாரத்தை கோருகிறார்கள்.  இவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். 2019 ஆம் ஆண்டு திருடர்களை பிடிப்பதாக குறிப்பிட்டார்கள். 2024  ஆம் ஆண்டு திருடர்களை பிடிப்பதாக குறிப்பிடுகிறார்கள்.இதுவே உண்மை.

2022 ஆம் ஆண்டு அரகலய என்பதொன்று தோற்றம் பெற்றது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளை குறிப்பிட்டுக் கொண்டு சூழ்ச்சிக்காரர்கள் முன்னின்று  செயற்பட்டார்கள்.  நாங்கள் அன்று  பின்வாங்காமல் இருந்திருந்தால் இந்த நாடும் பங்களாதேஸ் போல் மாற்றமடைந்திருக்கும். யுத்தத்துக்கு கட்டளை பிறப்பித்த நாங்கள்  சிவில் பிரஜைகள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கவில்லை.

அரகயலவில் போது வெறுப்புக்கள் மாத்திரமே வெளிப்படுத்தப்பட்டன. நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தோம்.அனுர, சஜித் சவால்களை பொறுப்பேற்கவில்லை. ஓடி ஒளிந்தார்கள்.

இவ்வாறான பின்னணியின் போது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை பொறுப்பேற்றார் அவருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினோம்.எமது ஒத்துழைப்புடன் நாட்டுக்கு எதிரான விடயங்களை செயற்படுத்த முயற்சிக்கும் போது  அதன் பாரதூரத்தை விளங்கி தனித்து வேட்பாளரை களமிறக்கினோம்.   கொள்கையை காட்டிக் கொடுத்து அரசியல் செய்யமாட்டோம்.

நாட்டை பிளவுப்படுத்தாமல், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாப்பதாக வெளிப்படையாக குறிப்பிடும் தற்றுணிபு எமது  ஜனாதிபதி வேட்பாளருக்கே உண்டு.நாட்டின் ஒருமைப்பாட்டை நாமல் ராஜபக்ஷவால் மாத்திரமே பாதுகாக்க முடியும்.

தாய் நாட்டு மீது பற்றுக் கொண்டுள்ள முற்போக்கான மக்கள் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும். நாமல் ராஜபக்ஷவால் மாத்திரமே சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

‘அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும்’

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

ஶ்ரீ.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று