அரசியல்உள்நாடு

அச்சுறுத்தல்களால் ரணிலின் வெற்றியை தடுக்க முடியாது – ஆஷு மாரசிங்க

தேர்தலில் பின்னுக்குத் தள்ளப்படுவதை உணரும்போது தேசிய மக்கள் சக்தி மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. எந்த அச்சுறுத்தலாலும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியைத் தடுக்க முடியாது. அவர்களுக்கு மக்கள் புள்ளடி மூலம் எதிர்வரும் 21ஆம் திகதி பதிலளிப்பார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச முன்னர் இருந்ததைவிட பின்தள்ளப்பட்டு தோல்வியின் விளிம்புக்கு சென்றுள்ளனர்.

இவர்கள் தேர்தல் பிரசார கூட்டங்களில் சேறு பூசும் பிரசாரமே செய்கிறார்கள். நாட்டை பொறுப்பேற்று எவ்வாறு முன்னேற்றுவது என்ற திட்டங்கள் எதுவும் இவர்களிடம் இல்லை. நிவாரணம் வழங்கும் திட்டமே இவர்களிடம் இருக்கின்றனர். அதனையே அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக அனுரகுமார திஸாநாய்ய தலைமையிலான தேசிய மக்கள் சக்தி செயற்கையான மக்கள் அலை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு, ஆட்சியை கைப்பற்றுவதாக மக்களை ஏமாற்றி வருகிறது. இவர்களின் இந்த போலி பிரசாம் தற்பாேது அம்பலமாகி இருப்பதால், இவர்களுக்கான மக்கள் ஆதரவு குறைந்து வருகிறது.

அதனால் இவர்கள் தற்போது மக்களை அச்சறுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு சென்று மக்களை அச்சுறுத்தும் வகையில் தெரிவித்த கருத்தே மக்கள் விடுதலை முன்னணியின் உண்மையான சுயரூபம்.

அனுரகுமார திஸாநாயக்கவின் தீவிர ஆதரவாளர்களும் மக்களை அச்சுறுத்தம் காட்சிகள் தற்போது சமூகவலைத்தலங்களில் வைரலாகி வருகின்றன. வெளிநாடுகளில் இருக்கும் இவர்களின் ஆதரவாளர்களே இதனை செய்து வருகின்றனர்.

மேலும் அனுரகுமாரவுக்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து 15இலட்சம் பேர் வர இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எத்தனை பேர் வந்துள்ளார்கள் என கேட்கிறோம்.

தேர்தலுக்கு இன்னும் 8 தினங்களே இருக்கும் நிலையில் குறைந்தது 10 இலட்சம் பேராவது வருவார்களா? அவ்வாறு வருவதாக இருந்தால் அவர்களுக்கு விசேட விமான சேவை முன்னெடுக்க வேண்டி ஏற்படும். அதனால் இது சாத்தியமில்லாத விடயமாகும்.

எனவே இவர்களின் பொய் பிரசாரங்கள் தொடர்பில் மக்கள் தற்போது விளங்கி வருகின்றனர். அதேபோன்று நாட்டை யாருக்கும் கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மை நிலையையும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். அதனால் தேசிய மக்கள் சக்தியின் அச்சுறுத்தல்களுக்கு மக்கள் சரியப்போவதில்லை.

எவ்வாறான அச்சுறுத்தலாலும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியைத் தடுக்க முடியாது. இவர்களின் அச்சுறுத்தல்களுக்கு மக்கள் எதிர்வரும் 21ஆம் திகதி புள்ளடி மூலம் பதிலளிப்பார்கள் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

 தேர்தலை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் 

 தேர்தல் மனு – உயர்நீதி மன்றம் உத்தரவு

ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு