அரசியல்உள்நாடு

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும் – சரத் வீரசேகர

இராணுவத்தினரின் கௌரவம் மற்றும் உரிமைகளை பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே பாதுகாக்க முடியும். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ரணில், அனுர, சஜித் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். 13க்கு ஒருபோதும் இடமில்லை என்று நாமல் ராஜபக்ஷ மாத்திரமே குறிப்பிடுகிறார்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க விரும்புபவர்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொஸ்கம பகுதியில் புதன்கிழமை (11) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் கொள்கை மற்றும் தீர்மானத்துக்கு எதிராக ஜனாதிபதியின் பக்கம் சென்றுள்ளார்கள். குறுகிய நோக்கங்களுக்காக நாங்கள் கட்சியை விட்டுச் செல்லவில்லை.

பெரும்பான்மையானவர்கள் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த மூன்று வேட்பாளர்கள் இராணுவத்தினரது உரிமைகளை  பாதுகாப்பதாக குறிப்பிடுகிறார்கள். 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கமே சர்வதேசத்துக்கு காட்டிக் கொடுத்தது. இதற்கு ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார ஆகியோர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

இராணுவத்தினரது உரிமைகள் பற்றி பேசுவதற்கு ரணில், சஜித், அனுர ஆகியோருக்கு தார்மீக உரிமை கிடையாது. இவர்களின் அரசியல் மேடைகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்.

யுத்த காலத்தில் வடக்கு மாகாணத்துக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோகத்தை வேண்டுமென்றே இடைநிறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றது. யுத்த சூழலிலும் வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றினோம்.

இராணுவத்தினர் யுத்தக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபடவில்லை என்பதை எடுத்துரைக்கும் வகையில் தான் கோட்டாபய ராஜபக்ஷ 30- 1 தீர்மானத்துக்கு இணையணுசரனை வழங்குவதில் இருந்து விலகினார். இராணுவத்தினரின் கௌரவம் மற்றும் உரிமைகளை பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே பாதுகாக்க முடியும்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காகவே இராணுவத்தினர்  தமது உயிரை நாட்டுக்காக தியாகம் செய்தார்கள். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கக்கூடாது என்பதை கடுமையாக குறிப்பிட்டார்கள். இராணுவத்தினரது அர்ப்பணிப்புக்கு உரிய மதிப்பளிக்கப்படுகிறதா?

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ரணில், அனுர, சஜித் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். 13க்கு ஒருபோதும் இடமில்லை என்று நாமல் ராஜபக்ஷ மாத்திரமே குறிப்பிடுகிறார்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க விரும்புபவர்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும். பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க முடியாது என்று குறிப்பிடும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு பெரும்பான்மையினர் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

நாட்டில் மேலும் 293 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா உடல் தகனம் : குழு அறிக்கையின் பின்னரே தீர்மானம்

பிரதமர் விசேட உரை