அரசியல்உள்நாடு

ரணிலுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது – ராஜித நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான மக்கள் ஆதரவு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. வீடுவீடாக சென்று மக்களை தெளிவுபடுத்த ஆரம்பித்ததன் மூலம் இந்த மாற்றத்தை அறிந்துகொள்ள முடியுமாகியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்தி்ட்டம் இடை நிடுவில் நின்றால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்பதை மக்கள் தற்போது உணர்ந்து வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு கோரி கடந்த 7ஆம் திகதி முதல் வீடுவீடாக செல்ல ஆரம்பித்தோம். இந்த வேலைத்திட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவும் நிகழ்நிலை ஊடாக தொடர்புகொண்டுவருகிறார்.

அதன்போதுதான் ஜனாதிபதிக்கு எந்தளவு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதை எம்மால் உணர்ந்துகொள்ள முடியுமாகியது.

தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என எந்த முடிவும் எடுக்காமல் மெளனமாக இருந்தவர்களே தற்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வருகிறார்கள்.

எமது இந்த வேலைத்திட்டத்தை பார்த்துக்கொண்டு மக்கள் விடுதலை முன்னணியும் வீடுவீடாக சென்று, தங்களின் வெற்றி உறுதியாகியுள்ளது. அதனால் தனிப்பட்டு விடாமல் தங்களுடன் இணைந்துகொள்ளுமாறு தெரிவித்து வருகிறது. யாழ்ப்பாணத்துக்கு சென்ற அனுரகுமார திஸாநாயக்கவும் இவ்வாறே தமிழ் மக்களை எச்சரிக்கும் வகையில் தெரிவித்திருந்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெரில் வந்தாலும் அவர்களின் உண்மையான கொள்கையே தற்போது வெளிப்பட்டு வருகிறது.

அதேநேரம் இவர்கள் வீடுகளுக்கு சென்று அங்குள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை பதிவு செய்துகொண்டு, அதன் பின்னர் அந்த எண்ணிக்கையை கணிப்பீடாக அறிவிக்கின்றனர்.

1982ஆம் ஆண்டு ராேஹன விஜேவீர ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டபோதும் இவ்வாறு வீடு வீடாக சென்று, அங்குள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டுக்கொண்டு, தேர்தலில் 14இலட்சம் வாக்குகளை பெறுவதாக அறிவிப்பு செய்து வந்தார்கள்.

ரோஹன விஜேவீரவின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களுக்கும் இன்றுபோல் அதிகமான மக்கள் கூடுவார்கள். ஆனால் இறுதியில் வாக்கு எண்ணும்போது ராேஹன விஜேவீரவுக்கு இரண்டு இலட்சத்தி 70ஆயிரம் வாக்குகளே செலுத்தப்பட்டிருந்தன.

இதன் பின்னரும் இந்த வழியில் சென்றால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்று உணர்ந்த ராேஹன விஜேவீர, அதன் பின்னரே வன்முறையை கையில் எடுக்க ஆரம்பித்து, 88 காலப்பகுதியில் அது தீவிரமடைந்தது.

அதேநேரம் மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசாரங்களுக்கு அதிகமான மக்கள் ஒன்றுகூடுவது வழமை. ஆரம்ப காலத்தில் இருந்து அது இடம்பெறுகிறது.

ஏனெனில் அந்த கட்சி ஆதரவாளர்களிடம் இருக்கும் ஒரு பண்புதான், மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் எங்கு இடம்பெற்றாலும் அந்த கூட்டத்துக்கு அவர்கள் செல்வார்கள்.

இந்த பண்பு வேறு எந்த கட்சியிலும் காணமுடியாது. அதனால் மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டங்களில் மக்கள் அதிகமாக கூடுவது தொடர்பில் பெரிதளவில் அலட்டிக்கொள்ள தேவையில்லை.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறாவிட்டால், அனைத்து வேலைத்திட்டங்களும் பாதிக்கப்பட்டு, நாடு மீண்டும் பாெருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் உலகில் வங்குராேத்து அடைந்த ஒரு நாடு இரண்டு வருடங்களில் இயல்பு நிலைக்கு வந்தது என்றால் அது இலங்கை மாத்திரமாகும்.

ரணில் விக்ரமசிங்கவே அதற்கு காரணமாகும்.இந்த திருப்பம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் உட்பட உலக நாடுகளின் பொருளாதார நிபுணர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

அதனால் மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

IMF அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

பால்மா விலை அதிகரிப்பு : நாளை உத்தியோகபூர்வ அறிவிப்பு

இன்று எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் திருத்தம்!