காசா போர் 12 ஆவது மாதத்தை தொட்டிருப்பதோடு இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் போர் நிறுத்த எதிர்பார்ப்புக் குறைந்து பணயக்கைதிகள் தொடர்ந்தும் பலஸ்தீன போராளிகளின் பிடியில் உள்ளனர்.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் தனது நிலைப்பாடுகளில் உறுதியாக இருக்கும் சூழலில் இஸ்ரேல் சிறையில் உள்ள பலஸ்தீன கைதிகள் மற்றும் பணயக்கைதிகள் இடையிலான கைதிகள் பரிமாற்றம் மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கையை எட்டுவதில் இழுபறி நீடித்து வருகிறது.
இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதளை அடுத்தே காசாவில் போர் வெடித்ததோடு போரை முடிவுக்குக் கொண்டுவர காசாவில் இருந்து இஸ்ரேலியப் படை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தி வருகிறது. எனினும் எகிப்து மற்றும் காசா எல்லைப் பகுதிகளில் இஸ்ரேலியத் துருப்புகள் தொடர்ந்து நிலைகொள்ளும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து உறுதியாக உள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் முற்சியில் அமெரிக்கா, கட்டாருடன் எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டுள்ளன.
எனினும் காசாவில் தொடர்ந்து மோதல் நீடிப்பதோடு கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இடம்பெறும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 40,972 ஐ தாண்டி 41,000 ஐ நெருங்கியுள்ளது. இதில் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் குறைந்தது 31 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்றுக் காலை நடத்திய வான் தாக்குதலில் காசா சிவில் அவசர சேவைப் பிரிவின் தலைவர் முஹமது முர்சி மற்றும் அவரது குடும்பத்தின் நால்வர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
முர்சியின் மரணத்துடன் ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தமது உறுப்பினர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்திருப்பதாக சிவில் அவசர சேவைப் பிரிவு தெரிவித்தது. எனினும் இது தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
ஜபலியாவில் இருந்து 5 கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் செய்தூன் புறநகரில் பல வீடுகளையும் இஸ்ரேலியப் படை குண்டு வைத்துத் தகர்த்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். தமது வீடுகளுக்குள் சிக்கி இருக்கும் சிலர் தமதுக்கு அவசர அழைப்பு விடுத்தபோதும் அங்கு செல்ல முடியாத நிலை இருப்பதாக மருத்துவக் குழுக்கள் தெரிவித்துள்ளனர். இதில் சிலர் காயமடைந்த நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
‘செய்தூனில் இடைவிடாது குண்டுகள் வெடிப்பதை நாம் கேட்டு வருகிறோம். அவர்கள் வீடுகளை குண்டு வைத்து தகர்க்கின்றனர். வெடிப்புச் சத்தங்கள், டாங்கிகள் நகரும் சத்தத்திற்கு மத்தியில் எம்மால் உறங்க முடியவில்லை. ஆளில்லா விமானங்கள் சுற்றுவதை நிறுத்தவில்லை’ என்று 1 கிலோமீற்றருக்கு அப்பால் காசா நகரில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஆக்கிரமிப்பாளர்கள் செய்தூனை தரைமட்டமாக்கி வருகின்றனர். அங்கு சிக்கிக் கொண்டுள்ள பொதுமக்கள் தொடர்பில் நாம் அச்சமடைந்திருக்கிறோம்’ என்றும் பெயரைக் குறிப்பிடாத அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
தவிர, மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாம் மீது இஸ்ரேல் செல் தாக்குதல்களை நடத்தியதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
காசா போர் அங்கு சுகாதார கட்டமைப்பை சீர்குலைத்திருக்கும் நிலையில் இரண்டு தசாப்தங்களில் அங்கு முதல் முறையாக போலியோ தொற்று பரவியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை போருக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தெற்கு காசாவில் தடுப்பு மருந்து வழங்குவதை முன்னெடுத்த வரும் ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒன்றிணைந்த உள்ளூர் சுகாதார நிர்வாகம் இன்று அதனை வடக்கு காசாவில் ஆரம்பிக்கவுள்ளது.
பத்து வயதுக்கு குறைந்த சுமார் 640,000 சிறுவர்களுக்கு போலியோ தடுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை ஒட்டி தடுப்பு மருந்து வழங்கும் பகுதிகளில் மாத்திரம் தற்காலிக மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
காசா போரை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதோடு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க – துருக்கிய பெண் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பில் முழு விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.
நப்லூசுக்கு அருக்கில் உள்ள பெய்டா சிறு நகரில் இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 26 வயது ஐசநூர் எஸ்கி எய்கி என்ற பெண்ணே இஸ்ரேலியப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.