அரசியல்உள்நாடு

சஜித்தை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம் – இராதாகிருஷ்ணன் எம்.பி

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, நுவரெலியா – தலவாக்கலையில் நேற்று (08) மதியம் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உரையாற்றும் போதே இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது நாட்டில் இதுவரை எட்டு ஜனாதிபதிகள் உருவாகியுள்ளனர். அவர்களுக்கிடையில் மாறுபட்ட கொள்கையே இருந்துள்ளது. தான் சிங்கள, பௌத்த வாக்குகளால்தான் ஆட்சிக்கு வந்ததாக ஒருவர் கூறினார்.

தமிழர்களையும் அரவணைத்துக்கொண்டே பயணிக்க வேண்டும் என மற்றுமொருவர் கூறினார். இப்படி மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டன. ஆனால் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்ககூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாசதான். இதனை நாட்டு மக்களும் நிச்சயம் உணரவேண்டும்.

சஜித்துடன் நாம் ஐந்தாண்டுகள் இணைந்து பயணிக்கின்றோம். அவர் இனவாதமற்ற தலைவர் என்பதை எமக்கு அறியமுடிகின்றது. ஒரு சிலர் வடக்குக்கு சென்றால் ஒரு விடயத்தையும், தெற்கில் மற்றுமொரு விடயத்தையும் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் அனைத்து பகுதிகளிலும் செய்யக்கூடிய விடயங்களை சொல்லும் தலைவராக சஜித் காணப்படுகின்றார். அனைத்து இன மக்களையும் சமமாக பார்க்கக்கூடிய தலைவராகவும் அவர் உள்ளார். அதனால் அடிப்படையிலேயே நாம் சஜித்தை ஆதரித்தோம்.

சஜித்தை நாம் வெறுமனே ஆமாம் சாமி போட்டு ஆதரிக்கவில்லை. 47 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். லயன்களை வெறுமனே கிராமங்களாக மாற்றுவதில் தீர்வு கிட்டப்போவதில்லை.

சஜித் ஆட்சியில் மலையகத்தில் நாம் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம். மக்களை அச்சுறுத்தி வாக்கு பெறும் முயற்சியில் அநுரகுமார திஸாநாயக்க ஈடுபட்டுவருகின்றார்.

சஜித்தைவிடவும் அநுர முன்னிலையில் இருக்கின்றார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். அநுரவை வெற்றிபெற வைப்பதே ஜனாதிபதியின் நோக்கம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ரணசிங்க பிரேமதாசதான் எமது மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கினார்.

Related posts

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சொத்துக்கள் பறிமுதல்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாமலை சந்தித்தார்

editor

பிரிந்த வடக்கு கிழக்கில் இவ்வளவு அராஜகம் செய்கிறார்கள் – கேள்வியெழுப்புகிறார் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்!