அரசியல்உள்நாடு

ரணில் – அனுர டீல் வலுவானதாக காணப்படுகிறது – விமல் வீரவன்ச

ரணில் – அனுர டீல் அரசியல் இன்று வலுவானதாக காணப்படுகிறது. ஒருமித்த நாடு என்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். 

சிலாபம் பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

தேசியத்தை பாதுகாப்பதற்காகவே குறுகிய காலத்தில் சர்வஜன சக்தி என்ற புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம். ஜனாதிபதித் தேர்தலில் பலர் போட்டியிடுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க , அனுரகுமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாச ஆகியோரின் கொள்கை பிரகடனத்தின் உள்ளடக்கம் ஒருமித்ததாக காணப்படுகிறது. 

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறார். ரணில் – அனுர டீல் அரசியல் இன்று வலுவானதாக காணப்படுகிறது. பகிரங்க விவாதம் ஒன்றில் ஈடுபடுவதற்கு ரணில், சஜித், அனுர, நாமல் ஆகியோருக்கு தற்றுணிவு கிடையாது. இவர்களால் எவ்வாறு நாட்டை நிர்வகிக்க முடியும். 

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தை கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஒருமித்த நாடு என்பதை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக அனுரகுமார திஸாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளார். 

பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு அனுரகுமார திஸாநாயக்க முன்னின்று செயற்பட்டார். ஆகவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அனுரகுமார திஸாநாயக்க ஒருபோதும் செயற்படமாட்டார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மை காலமாக அனுரகுமார திஸாநாயக்கவை முன்னிலைப்படுத்தி பேசுவதை அவதானிக்க முடிகிறது. அனுரகுமார தலைமையில் அரசாங்கத்தை உருவாக்கி, பங்களாதேஸ் நாட்டின் தற்போதைய நிலைமையை தோற்றுவித்து அரசியலமைப்புக்கு முரணாக மீண்டும் அதிகாரத்துக்கு வரவே ஜனாதிபதி முயற்சிக்கிறார். அதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

சனல் 4 இல் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற குழு!

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கு நிவாரணம்

editor

எங்களை தடை செய்யுங்கள் என சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் கோரிய இலங்கை அணி!