அரசியல்உள்நாடு

வெறும் வார்த்தைகளாக மாத்திரமன்றி செயற்பாட்டில் கொண்டு வருவோம் – சஜித்

2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டின் பிரகாரம் மொத்த மக்கள் தொகையில் 8.7% விசேட தேவையுடையோர் இருக்கின்றார்கள். அது எண்ணிக்கையில் 16 இலட்சம். இவர்களுக்காக பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரலெழுப்பி இருக்கிறேன்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் இதற்காக சமூக ஒப்பந்தம் ஒன்றிற்கு வந்ததோம். ஆனால் துரதிஷ்டவசமாக ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை. என்றாலும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதற்காக பாராளுமன்றத்தில் பிரேரணைகளை முன்மொழிந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் இருந்தார்கள்.

இந்த சகோதரர்களுக்காக குரலெழுப்பியவர்களுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த சமூகத்துக்காக பல்வேறு ஒப்பந்தங்களும், சாசனங்களும் கைச்சாத்திடப்பட்டாலும் அவை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக அவற்றை செயற்படுத்துவோம். இதற்கான தெளிவான வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லை.

2004 ஆம் ஆண்டு முதல் இதற்கான சட்டங்கள் முன்மொழியப்பட்டாலும், அவற்றை இதுவரையும் நடைமுறை படுத்தாமல் இந்த குழுக்கள் அலைக்கழிக்கப்பட்டன. வாக்குறுதிகளை வழங்கி விசேட தேவையுடைய இந்த சமூகத்துக்கு எதிராக செயல்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

மாற்றங்கள் இடம் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற சக்திகள் அல்லது அதிகாரிகளின் அழுத்தங்கள் காரணமாகவே இந்த மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

எனவே ஐக்கிய மக்கள் சக்தி இவற்றில் மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியால் வகுக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தை வெளியிடும் மாற்றுத்திறனாளுக்கான தேசிய மாநாடு கொழும்பில் நேற்று முன்தினம் (06) இடம்பெற்றது.

விசேட தேவையுடையவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

விசேட தேவையுடையவர்களின் பிரச்சினைகளை தனி அமைச்சின் ஊடாக தீர்க்க முடியாது. இதற்காக பலவிதமான திட்டங்கள் அவசியமாகும். விஷேட தேவையுடைய சமூகத்திற்காக புதிய தேசியக் கொள்கையொன்று அவசியமாகும்.

எனவே விசேட தேவையுடையோரின் நலன்புரி விடயங்களுக்காக தனியான ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது வாக்குறுதியளித்தார்.

சட்டரீதியான இணைப்புகளை ஏற்படுத்துவதற்கு தனியான வேலை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு கல்விக்கும் தொழிலுக்குமான உரிமை இருக்கின்றது.

இவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு தனியான மூன்று வீத கோட்டா உண்டு. அந்த தொழில் கொள்கையை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் நடைமுறைப்படுத்தும். விசேட தேவையுடையவர்களுக்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு விசேட தேவையுடையோர்கள் பயன்படுத்துகின்ற உபகரணங்களுக்கும் வரி அறவிடப்பட்டிருக்கிறது. எனவே அந்த வரிகளை நீக்குவோம்.

அத்தோடு காப்புறுதிகளையும் வழங்குவோம். வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்வதற்கு தடைகள் காணப்படுகின்றன.

எனவே அவற்றை இலகுபடுத்துவோம். இந்த சமூகத்தில் காணப்படுகின்ற திறமையானவர்களுக்காக தனியான விசேட வேலை திட்டங்களையும் முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

இவை வெறும் வார்த்தைகளாக மாத்திரமன்றி செயற்பாட்டில் கொண்டு வருவோம். விசேட தேவையுடையவர்களும் எமது நாட்டின் பிரஜைகளே.

எனவே இந்த சமூகத்துக்காக சகல வசதிகளையும் கொண்ட கல்விமுறை ஆரம்பிக்கப்பட்டு பயிற்சிகளையும் வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

முஸ்லிம்கள் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்வதற்கு புதிய குழு- இப்தார் நிகழ்வில் ரணில்

மின் கட்டண பட்டியலில் அதி கூடிய தொகை தொடர்பில் அவதானம்

ஹிஸ்புல்லா உட்பட மூவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் [UPDATE]