அரசியல்உள்நாடு

இன, மத அடிப்படையில் தேர்தல் பணிகளை நடத்தமாட்டேன் – ஜனாதிபதி ரணில்

அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் ஆன்மீக வழிகாட்டலை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து மதங்களுக்கிடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (07) முற்பகல் நடைபெற்ற இலங்கையின் அப்போஸ்தலிக்க ஆயர் பதவிப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

சுதந்திய கிறிஸ்தவ தேவாலயங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் கலாநிதி கர்பி டி லெனரோல் ஆயர் தலைமையில் 160 மாணவர்களுக்கு பதவிகளும் பட்டங்களும் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இன, மத விடயங்களை அடிப்படையாக கொண்டு தாம் தேர்தல் பணிகளை நடத்துவதில்லை எனவும், மதத்தை எப்போதும் அரசாங்கத்திலிருந்து பிரித்து வைத்து, அனைத்து மதத்தினருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதே தமது நோக்கம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அனைத்து மத மக்களும் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப யுகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச சுதந்திர அப்போஸ்தலிக்க மறைமாவட்ட ஆயர் பேரவையின் சிடொனின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி கிர்பி டி. லனரோல் அருட்தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து தனது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த தசாப்தத்தில் அப்போஸ்தலிக்க ஆயர் பீடத்திற்கு அருட்தந்தை லனரோல் ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டினார்.

நாட்டில் நிலவும் சமூகப் பொருளாதார நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்னர் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குத் தீர்வு காண்பதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கமளித்தார்.

இலங்கையில் கிறிஸ்தவ சமூகத்தின் வெற்றிகளைப் பாராட்டிய ஜனாதிபதி, இயேசு கிறிஸ்துவின் போதனைகள் பல நூற்றாண்டுகளாக நாட்டில் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்டார்.

தமது மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அனைத்து மதத்தினருக்கும் சமமான வசதிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மத நடைமுறைகளின் எதிர்காலம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒழுங்கமைக்கப்பட்ட மதங்களில் டிஜிட்டல் யுகம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் என இரண்டு முக்கிய சவால்களை சுட்டிக்காட்டினார்.

யொஹெதஸ் குட்டன்பேர்க் கண்டுபிடித்த அச்சு இயந்திரம் போன்ற தொழில்நுட்பம் மத போதனைகளை பிரபலப்படுத்துவதில் வரலாற்று ரீதியாக முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். எனினும், டிஜிட்டல் தளங்களின் எழுச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மதங்களுக்கு ஏற்படுத்தக் கூடிய புதிய சிக்கல்கள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

குறிப்பாக டிஜிட்டல் ஊடகங்களால் பாதிக்கப்படும் இளைஞர்களுக்கு உளவியல் ரீதியான வழிகாட்டல்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இளைஞர்கள் தொடர்பான அண்மைக்கால பிரச்சினைகளுக்குரிய நிகழ்வுகளை எடுத்துரைத்துடன், இப்பிரச்சினைகளைத் தீர்க்க மத மற்றும் சமூகத் தலைவர்களின் அவசியத்தை வலியுறுத்தினார்.

எதிர்வரும் காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விடயத்தை கருத்திற்கொண்டு செயற்படுவதே சிறந்ததெனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மதப் பின்னணி எதுவாக இருந்தாலும் அனைத்து மக்களின் தேவைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பான தகவல்களை முன்வைத்தார்.

பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில், நாடு முழுவதும் உள்ள மக்கள் எந்தவித மத, இன பாகுபாடும் இன்றி இன்னல்களை எதிர்கொண்டதாக சுட்டிக்காட்டினார். இக்கட்டான நேரத்தில் பொறுப்பேற்றமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாராட்டிய சாகல ரத்நாயக்க, அவரது அமைதியான மற்றும் நம்பகமான தலைமைத்துவத்தையம் பாராட்டினார்.

மத்திய வங்கியின் சுதந்திரம், புதிய அரச நிதி முகாமைத்துவ சட்டங்கள் மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலங்களை நிறைவேற்றியமை போன்ற குறிப்பிடத்தக்க மறுசீரமைப்புகள் பற்றி குறிப்பிடப்பட்ட சாகல ரத்நாயக்க, நாட்டை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் குறிப்பிட்டார்.

Related posts

பல பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தகர்க்க நடவடிக்கை

நாடு முழுவதும் 10,000 போலி வைத்தியர்கள் கண்டுபிடிப்பு

கோட்டா எங்களை ஏமாற்றினார் – பேராயர் கார்டினல்