அரசியல்உள்நாடு

ரணில் பாராளுமன்றத்தின் நடைமுறைகளை மீறியுள்ளார் – ரவூப் ஹக்கீம் எம்.பி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  அங்கீகாரம் அளித்துவிட்டு, தனக்கு ஆதரவு அளிக்காத சுமந்திரன் எம்.பி கொண்டுவந்த மாகாண தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நிரலிலிருந்து நீக்கச் செய்திருப்பதன் மூலம் பாராளுமன்றத்தின் நடைமுறைகளை மீறியுள்ளார் என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விசனம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மன்னாரில்  செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரசாரக் கூட்டத்தில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றியபோதே இதனைக் கூறினார்.

அங்கு, அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மன்னார், வவுனியா பிரதேசங்களில் இனப்பிரச்சினை உக்கிரமடைந்து, ஆயுத கலாசாரத்தின் தாக்கம் இரு சிறுபான்மைச் சமுதாயங்களுக்கிடையிலும் முரண்பாடுகளைத் தோற்றுவித்த போதும், இந்த மண்ணில் ஜனாதிபதித் தேர்தல் வரும்போது தான் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒருமித்து வாக்களிக்கும் சந்தர்ப்பம் வருகின்றது.

இதேவேளை, பாராளுமன்றத் தேர்தல் வந்தால் பிரதிநிதிகளை தனித்தனியாக தெரிவு செய்கின்ற போட்டிக்குப் போய்விடுவோம். வெவ்வேறு அணிகளிலிருந்து போட்டியிடுவோம். ஆனால், ஜனாதிபதித் தேர்தல் இரண்டு சமூகங்களும் ஒருமித்து வாக்களிக்கும் சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது.

இந்த முறையும் இந்தவாய்ப்பு இல்லாமல்  போய் விடுமோ என்ற அச்சம் நிலவிய போதும், தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தினால் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருமித்து வாக்களிக்கும் வாய்ப்பும் வந்துள்ளது.

 இம்முறையும் தனித்து தமிழ் வேட்பாளரை நிறுத்தியிருந்த செய்தி வந்திருந்த போதும் நாட்டின் நிலைவரத்தை கவனத்தில் கொண்டு எல்லோரும் ஒற்றுமைப்பட்டு, நாட்டின் அடுத்த கட்ட அரசியலை தீர்மானிக்கின்ற இந்த முக்கியமான கட்டத்தை நாங்கள் வீணாக விரயம் செய்து விடாமல் ஒருமித்து ஒரு தெரிவைச் செய்வதன் மூலம் தான் நாம் அடுத்த கட்ட அரசியலை சரி செய்யமுடியும்.

கடந்த காலங்களில் பலவிதமான பொருத்தங்களைத் தந்து, வாக்குறுதிகளைத் தந்து,இரண்டு சமூகங்களும் எதிர்பார்த்த எல்லா இலக்குகளையும் அடையமுடியவில்லை.

எல்லா இலக்குகளையும் அடையவதற்கான  யதார்த்தபூர்வமான, உளப்பூர்வமான ஒரு முயற்சியையாவது, நாங்கள் ஆதரித்தவர்கள் செய்யவில்லை. என்கின்ற ஓர் ஏமாற்றம் சிலர் மத்தியில் காணப்படுகின்றது.

இம்முறை தாங்கள் வேறு இரு தீர்மானத்தை எடுத்து, தங்ளுடைய சார்பில் தனியாக ஒரு வேட்பாளரை நிறுத்திவிட்டு பேசுவதன் மூலம் தங்களுக்குத் தாங்களே, தங்களுடைய நீண்டகால அரசியல் அபிலாஷைகளுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுவார்களெனும் அச்சம் இன்று பரவலாக எழுந்திருக்கிறது.

தனி வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் அவருக்கான வாக்கு வீதம் வெகுவாக குறைந்து விட்டால், தமிழர் சமூகம் அப்படியே தங்களுடைய இலக்குகளை இனியும் அடைய முடியாமல் ஒழுங்கான மக்கள் ஆணை இல்லாமல் போய்விடும்  நிலைமைக்கு வந்தவிடும்  ஆபத்தும் நம் முன்னில் இருந்து கொண்டிருக்கின்றது.

இதற்காகத்தான் தமிழரசுக் கட்சி மிக யதார்த்தபூர்வமாக களநிலைவரங்களைச் சிந்தித்து  எடுத்த தீர்மானம் குறித்து தமிழரசுக் கட்சியை நாம் வாழ்த்த வேண்டும்.

தமிழரசுக்கட்சி,முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தமிழ்பேசும் மக்களுக்கு மத்தியில் ஒரு சிநேகபூர்வமான அரசியலை பல வருடகாலமாக செய்து வந்திருக்கின்றோம்.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் ஒன்றின்போது தீர்மானம் எடுக்கின்ற போது அந்த தீர்மானத்தில் நாங்கள் ஒருமித்து நிற்பதன் மூலம் மாத்திரம் தான் எங்களுடைய குறைந்த பட்ச அபிலாசைகளைப்பற்றிய திட்டவரைபுகளையாவது  செய்து, அதற்கான முயற்சிகளை செய்யமுடியும்.

 எனவேதான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்ற ஆணவத்தில், அகங்காரத்தில் மஹிந்த ராஜபக்ஷ 2010ஆம் ஆண்டு போட்டியிட்டபோது நாங்கள் ஓரு இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை தேர்தலில் நிறுத்தி இந்த வடகிழக்கு மண்ணில் 95  வீதத்துக்குமதிகமான மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தோம்.

 ஆனால்,எங்களுடைய தெரிவுகள் வெற்றியோ தோல்வியோ தமிழர்களும் முஸ்லிம்களும்   அதிகபட்ச  ஆதரவை நாங்கள்  கொடுத்தோம். ஏன்பதற்கு பின்னால் உள்ள செய்தி, நாங்கள் ராஜபக்ஷவின் குடும்பத்தினருக்கான இனவாதத்தை நிராகரிக்கிறோம் என்பதாகும்.

அவர்களுடைய மிக மோசமான அரசியலை முழுமையாக நாங்கள் துவம்சம் செய்து விட்டோம் என்ற செய்தியை நாங்கள் சொன்னோம்.

அதற்குப் பின்பும் அடுத்த தேர்தலிலும் அதே மஹிந்த ராஜபக்ஷவை எங்களால் எல்லோரும் ஒருமித்து நின்றதன் மூலம் தோற்கடிக்க முடிந்தது.  ஆனால், அந்தத் தேர்தலில் பிரதமராக வந்த ரணில் விக்கிரமசிங்க கொடுத்த வாக்குறுதிகளை குறைந்த பட்சம் இந்த  அதிர்ஷ்டவசமாக கிடைத்த கதிரையில் உட்காரக் கிடைத்த சந்தர்ப்பத்தில் செய்திருந்தால் நாங்கள் குறைந்த பட்சம் அவரைப்பற்றிச் சிந்தித்திருக்கலாம்.

கடந்த இரண்டரை வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்துவிட்டதாகச்  சொல்லும் இந்த ஜனாதிபதிக்கு கிடைத்த வாய்ப்பில் குறைந்த பட்சம்  நடைமுறையில் இருந்து இன்று இல்லாமல் இருக்கின்ற மாகாண சபை தேர்தலையாவது நடத்தவில்லை.

உள்ளுராட்சி சபைத் தேர்தலையாவது நடத்தாத அவருக்கு உயர் நீதிமன்றம்  அவர் வேண்டுமென்றே மக்களுடைய மனித உரிமையை மீறி இருக்கிறார் என்ற தீர்ப்பையும் கொடுத்துள்ளது.

பாராளு மன்றத்தில் சுமந்திரன் எம்பி கொண்டுவந்த சட்டமூலம் மூலம்  மாகாண சபைக்கு இருக்கின்ற  தேர்தல் முறையை மாற்றுவதற்கான விடயத்துக்கு  அவராக அங்கீகாரம் கொடுத்துவிட்டு தனக்கு ஆதரவு தரவில்லை என்ற காரணத்தினால், கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவையும் மீறி நிகழ்ச்சி நிரலிருந்து மாகாண தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நீக்கச் செய்திருப்பதன்மூலம் பாராளுமன்றத்தின் நடைமுறைகளை மாத்திரமல்ல ,காலம் காலம் இருந்து வந்த மரபுகளையும் மீறி ஒரு சர்வாதிகாரியாக. நடந்து கொள்கின்றார்.

 அவர் தோற்கப்போகும் தேர்தல் என்று தெரிந்தும் கூட, கடைசிக் கட்டதிலாவது  தானாக  செய்த பிழைக்கு பிராயச்சித்தமாக மாகாணசபைகளை மீண்டும் நிறுவதற்கான அந்த  தேர்தல் முறைமாற்றத்துக்கான  சட்ட மூலதத்தையும்   இன்று   வாக்கெடுப்புக்குவிடாமல் வேண்டுமென்று தடுத்தன் மூலம் தன்னுடைய சுயரூபத்தை ரணில் விக்கிரமசிங்க  தமிழ் பேசும் சமூகங்களுக்கு வெளிக் காட்டியிருக்கின்றார்.

வடகிழக்கிலே தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகாரத்தை அனுபவிப்பதற்கு தங்களுடைய பிரதேசங்களில் சுயாட்சியை செய்வதற்கான குறைந்த பட்ச அதிகாரங்களையாவது கொண்டிருக்கின்ற மாகாணங்களையும் முழுமையாக செயலலிழக்கச் செய்து அதை  உயிர்ப்பிப்பதற்கான வாய்ப்பை பாராளுமன்றத்தில் ரணில் விக்கிம சிங்க நிராகரித்திருக்கிறார் என்பது அவருக்கு வக்காலத்து வாங்குகின்ற ஒருசிலருக்காவது படிப்பினையாக இருக்கவேண்டும்.என்பதை நான் இங்கு சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

இந்ததேர்தல் எவ்வளவு முக்கியத்தவம் வாய்ந்ததென்பது ஒருபக்கமிருக்க இந்தத் தேர்தலில் கடந்த காலங்களில் இந்த நாட்டில் ஜனநாயக ரீதியாக ஆட்சியை கைப்பற்ற முடியாது ஆயுதம் தாங்கித்தான் நாங்கள் கிளர்ச்சி செய்துதான் ஆட்சியைப் பிடிக்கவேண்டுமென்று நாடு முழுக்க கொலைக் கலாசாரத்தை அறிமுகப்பபடுத்தி மக்களுடைய ஜனநநாயக உரிமையை பறித்த, தேர்தல்களைப் பகிஷ்கரித்த, தேர்தலில் பங்கெடுத்த  கட்சிகளின் உறுப்பினர்களைக் கொன்றொழித்த ஓர் இடது சாரி இயக்கம் ஒரு புதிய முகமூடியுடன் வந்துள்ளது.

அவர்கள் புதிய முக மூடியுடன் இந்த நாட்டிலே ஒரு புது யுகம் படைக்கவேண்டமென்றால் ஒருமாற்றம் வரவேண்டமென்றால்

எங்களுக்குத் தாருங்கள் என்று கேட்கின்றார்கள்.அவர்களுக்கு இந்த நாட்டில் பொருளாதாரம் சமபந்தமாக பேசுவதற்கு இருக்கின்ற ஓரு விடயம் ஊழலை ஒழிப்போம் என்பது மாத்திரம்தான்.ஆனால் எப்படி ஒழிக்கப் போகின்றார்கள் என்பதற்கான எந்தவொரு திட்டமுமே கிடையாது. இவர்களுக்கு  அனுபவமுள்ள பொருளாதார நிபுணர்களே இல்லை.

 இதேவேளை, சஜித்பிரேமதாசவின் ஆளுமையைப்பற்றி சிலாகித்துப் பேசலாம்.அவரது அணியில் பொருளாதார நிபுணர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, கபீர் ஹாசிம் எவரை எடுத்தாலும் நிதி அமைச்சராக நியமிக்கக் கூடிய   நாடறிந்தவர்களாக உலகம் அறிந்தவர்களாக இருப்பவர்களே எங்கள் அணியில் உள்ளனர்.

ஓரேயொரு முறை திஸ்ஸமஹாராம பிரதேச சபையை ஆட்சி செய்தததைத் தவிர ,வேறு எங்கும் அதற்குப்பிறகு  ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.

நாங்கள் வந்தால் ஊழல்காரர்களை சிறைத்தில் தள்ளுவோம் எனச் சொல்லுகின்றார்கள்.

ஆனால் அதற்கான சட்டதிட்டங்கள் வகுக்கப்படவேண்டும். சட்ட நடைமுறைகள் செய்யப்படவேண்டும். சட்டமா அதிபர் திணைக்களம் முழுமையான சுதந்திரமான திணைக்களமாக மாற்றப்படவேண்டும்.

இவ்வாறு  முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Related posts

அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளருக்கும் – செந்தில் தொண்டமானுக்கும் இடையில் கலந்துரையாடல்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பெண் கைதி தப்பியோட்டம்

மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை நாட்டுக்கு