அரசியல்உள்நாடு

அடுத்தது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அதிக வாய்ப்பு.

உயர்நீதிமன்ற உத்தரவின்படியும் தற்போது அமுலிலுள்ள சட்ட நடை முறைகளுக்கமையவும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முதலில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்தத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதே தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு’’ என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

நிகழ்கால தேர்தல் நடைமுறைகள் குறித்து நேற்று புதன்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு அமைச்சரவைத் தீர்மானம் எடுத்திருந்தாலும் அது இன்னும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை என்பதுடன் முடிந்தளவு விரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆகவே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நேரடியாக தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் மாவட்ட செயலகங்கள், தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தவிர்ந்த ஏனைய அரச அதிகாரிகளின் தபால்மூல வாக்களிப்பு செயற்பாடுகள் இன்றும் (05) நாளையும் (06) இடம்பெறும்.

வாக்களிப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று நாட்களிலும் வாக்களிக்க முடியாமல் போனால் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் தமது பணியிடங்களில் வாக்களிக்க முடியும்.

தபால்மூல வாக்களிப்புச் செயற்பாடுகளுக்கு ஏதாவது இடையூறு ஏற்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்ற செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தாக்கல்செய்யப்பட்ட வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும், 2023ஆம் ஆண்டு இடம்பெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்தி நிறைவுசெய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலைமையிலேயே அந்த வேட்பு மனுக்களை இரத்துச்செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஆனால், அமைச்சரவையின் அந்தத் தீர்மானம் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதேபோன்று, நீதிமன்றத்தின் உத்தரவும் அமுலில் இருக்கிறது. எனவே, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, மிக விரைவாக அந்தத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

தற்போதுள்ள சட்ட விதிமுறைகளுக்கமைய, முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தவே நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தவே நேரிடும்’’ என்றார்.

Related posts

நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை செலுத்த அவகாசம்

பேராதனை பல்கலை கழக மாணவர்கள் கைது..

கொரோனாவிலிருந்து இதுவரை 2,789 பேர் குணமடைந்தனர்