அரசியல்உள்நாடு

ஆட்சிக்கு வந்ததும் ஊழலை ஒழிப்போம் – மஹிந்தவின் கொள்கைகளை நான் கடைப்பிடிப்பேன் – நாமல்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொறுப்பு எனக்கும், எனது கட்சிக்கும் உண்டு. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பொறுப்பற்ற வகையில் நாங்கள் செயற்படவில்லை.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததை போன்று ஊழல் மோசடிகளையும் முடிவுக்கு கொண்டு வருவேன். மக்களால் தாங்கிக் கொள்ள கூடிய நியாயமான வரி கொள்கை அமுல்படுத்தப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு திங்கட்கிழமை (02) கொழும்பு – ரத்னதீப நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஐந்து சக்திகளை ஒன்றிணைத்து ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கொள்கை ரீதியில் மாறுப்பட்ட தரப்பினருடன் கூட்டணியமைத்ததால் எமது அணியினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கிருந்தது. இதனால் தான் பஷில் ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை ஸ்தாபித்தார்.

நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாக்க நிபந்தனையில்லாமல் போரிட்டவர்களையும், பௌத்த சாசனத்தையும் பாதுகாக்க  வேண்டியது எமது பிரதான கொள்கையாகும். பொருளாதார நெருக்கடிக்கு எம்மால் நிச்சயம் தீர்வு காண முடியும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொறுப்பு எனக்கும், எனது கட்சிக்கும் உண்டு. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பொறுப்பற்ற வகையில் நாங்கள் செயற்படவில்லை. 30 வருடகால யுத்தத்தை நாங்களே முடிவுக்கு கொண்டு வந்தோம்.

சூழ்ச்சிகளினால் எம்மையும், எமது அணியையும் வீழ்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது நாட்டுக்காக சிறந்த தீர்மானங்களை எடுத்தோம். நாட்டை முன்னேற்றும் ஆளுமை மற்றும் திறமை எம்மிடமுள்ளது. எதிர்வரும் 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை இரண்டு மடங்காக  அதிகரித்துக்  கொள்ள வேண்டும். அதற்கான திட்டங்கள் எம்மிடம் உள்ளன.

நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தினால் வரிசை கலாச்சாரத்தை முழுமையாக முடிவுக்கு கொண்டு வரலாம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். இருப்பினும் துரதிஷ்டவசமாக அவை செயற்படுத்தப்படவில்லை.

எமது அரசாங்கத்தில் முதல் ஆறு மாத காலத்துக்குள் சகல அரச கட்டமைப்புக்களும் டிஜிட்டல் மயப்படுத்தப்படும்.

சர்வதேச அமைப்புக்களின் கொள்கைக்கு அமையவே வரி கொள்கை அமுல்படுத்தப்படுகிறது. இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும். மக்களால் தாங்கிக் கொள்ள கூடிய நியாயமான வரி கொள்கை அமுல்படுத்தப்படும்.

 நேர் வரிக்கு பதிலாக நேரில் வரி முறைமை அமுல்படுத்தப்படும். அரச நிர்வாகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாதொழிக்கலாம். யுத்த காலத்தில் அரசியல்வாதிகள் யுத்தம் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் செய்தார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ 3 வருடத்துக்குள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்தார்.

தேர்தல் மேடைகளில் ஊழல் ஒழிப்பு  என்று தொடர்ச்சியாக எழுப்பப்படும் கோசத்தை ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வருவோம். மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளை  நான் கடைப்பிடிப்பேன் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

பாத்திமா முனவ்வராவுடைய ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது

அதிருப்தியில் ஐ.நாவின் மனித உரிமைகளின் அமைப்பின் இயக்குனர் இராஜினாமா!