ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மக்களை குழப்பும் தீர்மானங்களையே எடுப்பார்.
அவர் தற்போது அறிவித்துள்ள தீர்மானம் தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
பம்பலப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்தமை தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுமந்திரன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது நிலைப்பாட்டுடன் வேறு குழுவுடனேயே செயற்பட்டு வந்தார்.
எனவே சுமந்திரன் ஏதேனுமொரு குழுவைத் தெரிவு செய்கின்றார் எனில், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெற்கு மக்கள் சிந்திக்க வேண்டும்.
சுமந்திரனின் தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அதற்கு எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். இது மக்களை குழப்பும் செயற்பாடாகும். ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சுமந்திரமே மக்களை குழப்பிக் கொண்டிருந்தார்.
எனவே அவரது தீர்மானங்கள் தொடர்பில் வடக்கு மக்கள் மாத்திரமல்ல, தெற்கு மக்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும். சுமந்திரன் ஏதேனுமொரு தீர்மானத்தை எடுப்பாரானால் அது தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தியாகும் என்றார்.
-எம்.மனோசித்ரா