அரசியல்உள்நாடு

நாட்டை நேசிப்பது உண்மையா ? எனக்கு ஆதரவு தாருங்கள் – ஜனாதிபதி ரணில்

நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகும் போது அதனை மீட்பதற்கு எப்போதும் ஒன்றுபடுவதே ஐக்கிய தேசியக் கட்சியின் பண்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். அன்று ஜே. ஆர் ஜயவர்தன செய்ததைப் போன்று தானும் கடந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க செயற்பட்டதாகவும், நாட்டை நேசிக்கும் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இருந்தால், இந்த வேலைத்திட்டத்தை தொடர தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வந்த போது அவரை காப்பாற்றியவர் தாம் என  நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இவ்வாறு  பாதுகாத்த ஐக்கிய தேசியக் கட்சியை சஜித் பிரேமதாச அழித்ததாகவும், ஐக்கிய தேசியக் கட்சியை அவரால் ஒருபோதும் முன்னேற்ற  முடியாது எனவும், நாட்டை நேசிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் என்ற வகையில், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற தனக்கு ஆதரவளிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

பண்டாரவளையில் நேற்று சனிக்கிழமை (31) முற்பகல் நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டைக் காப்பாற்ற கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்ததன் காரணமாகவே தாம் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக மேலும் தெரிவித்தார்.

தனது தேர்தல் விஞ்ஞாபனம் செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் அமுல்படுத்தக்கூடிய ஒரு நடைமுறை வேலைத்திட்டம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்களின் வாழ்க்கைச் சுமையை மேலும் குறைத்தல், தொழில்  வாய்ப்பு வழங்குதல், வரிச்சுமையைக் குறைத்து    தாங்கிக்கொள்ளக் கூடிய வரி முறையை உருவாக்குதல், பொருளாதாரத்தை மேம்படுத்தி  ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குதல், உறுமய மற்றும் அஸ்வெசும  ஆகியவற்றை பாதுகாத்து தகுதியான அனைவருக்கும் அவற்றை வழங்குதல் ஆகிய 05  முக்கிய நோக்கத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அஸ்வெசும வேலைத்திட்டம் சமுர்த்தியை அழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் அல்ல என்றும், சமுர்த்தி வேலைத்திட்டத்தை வினைத்திறன் மிக்கதாக்க ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களும் பிரச்சினையின்றி தமது பணிகளை தொடர முடியும் என்றும்,  அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில்  தான் உறுதியாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

பல கட்சியினர் எனக்கு ஆதரவளிக்க முன் வந்திருப்பதாலேயே நான் சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறேன். அன்று கஷ்டமான நாட்டை நான் ஏற்றுக்கொண்டேன். இன்றைய நிலை எவ்வாறு உள்ளது என்பது மக்களுக்கு தெரியும். அதற்காக நாம் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக பால்மா, கேஸ், டீசல், பருப்பு உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளது.  

குறைந்த வருமானம் பெறுவோருக்கு அஸ்வெசும பெற்றுத் தந்தேன். மேலும் பல சலுகைகளை வழங்குவோம். எனக்கு பிரதானமாக ஐந்து நோக்கங்கள் உள்ளன. வாழ்க்கை சுமையை குறைப்பேன். தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க உள்ளேன்.  வரிச்சுமையை குறைப்பேன். பொருளாதாரத்தை பலப்படுத்தி ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவேன். உறுமய – அஸ்வெசும திட்டங்களின் கீழான நிவாரணங்கள் தகுதி பெற்ற சகலருக்கும் வழங்கப்படும்.  

எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களை தேர்தல் முடிந்ததும் மறு தினமான செப். 22 இலிருந்து தொடர்ச்சியாக முன்னெடுக்க கூடிய வேலைத்திட்டங்களையே குறிப்பிட்டுள்ளேன். இப்போது வரையில் நாம் பல விடயங்களை செய்திருந்தாலும் அவை மக்கள் சுமையை குறைக்க போதுமானவை அல்ல என்பதை நாம் அறிவோம். 

ரூபாவை பலப்படுத்தி வாழ்க்கை சுமையை குறைப்பதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. அதனால் பொருட்களின் விலையும் குறையும். வரியை சேகரித்தே நாம் அதனை செய்ய வேண்டியுள்ளது. அஸ்வெசும திட்டத்துடன் சமுர்த்தியும் இணைக்கப்பட்டிருப்பதால் சமூர்த்தி ஊழியர்களின் பாதுகாப்பிற்கும் வழி செய்திருக்கிறோம்.

நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்தால் மட்டுமே ரூபாயின் பெறுமதியும் வலுவடையும். நான் நாட்டை ஏற்றுகொண்டதன் பின்னர்  2023 நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி அதிகரிக்க வழி செய்தேன். அதனால் அரச ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்க முடிந்தது. 

அனுரவும் சஜித்தும் வரியை குறைப்போம் என்கிறார்கள். வரியை குறைத்தால் நிவாரணங்களை வழங்க முடியாது என்பதே உண்மை. ஆனால் நாம் நாட்டில் உற்பத்தியை அதிகரித்து வரிச் சுமையை குறைப்பதாக சர்வதேச நாணய நிதியம்,உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சீன எக்ஸிம் வங்கி உள்ளிட்ட பல தரப்புக்களுடன் இணைந்து செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வரி தொடர்பிலான நிபந்தனைகளுக்கு இணங்கியுள்ளோம்.எனவே திடீரென வரியை குறைப்பதால் அந்த தரப்பினருடனான ஒப்பந்தம் மீறப்படும். நாட்டுக்கு நிதி நிவாரணம் கிடைக்காது. அதனால் 2022 இல் இருந்ததை விடவும் பொருட்களின் விலை அதிகரிக்கும். 

கைத்தட்டல் வாங்குவதற்காக 10 ரூபாய்க்கு அத்தியாவசிய பொருட்களை தருவேன் என்று நான் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டேன்.கேஸ் சிலிண்டர் 8000 ரூபாவிற்கு வாங்கும் நிலைக்கு நாம் செல்ல வேண்டுமா ?பொருளாதாரத்தை பலப்படுத்தி நிவாரணங்களை பெற்றுக்கொள்வதா என்ற பிரச்சினையே நாட்டில் உள்ளது.  

பெருந்தோட்டங்களை கிராமமாக மாற்றும் திட்டத்தை செயற்படுத்துவோம். தொழிலாளர்களுக்கு சட்டரீதியாக சம்பள அதிகரிப்பு வழங்கியுள்ளோம். இளையோருக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவோம். அடுத்த வருடத்தில் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்கள் உருவாகும். முதலில் பயிற்சி பெற்ற பின்னர்  நிரந்த நியமனம் வழங்கப்படும்.  

அதற்கு மேலதிமாக 50 ஆயிரம் பேருக்கு சுய தொழில் பயிற்சி பெற்றுக்கொள்ள நிதி நிவாரணமும் வழங்குவோம்.  ஜேவிபி தொழில் வங்கியை ஆரம்பித்து தொழில் வாய்ப்புக்களை அறிவிப்போம் என்று சொல்கிறது. அதற்காக முதலில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதை அவர்கள் மறந்து போயுள்ளனர். சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 41 சொற்கள் கூட இளையோரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. இவ்வாறானவர்களிடம் நாட்டை கையளிக்க வேண்டுமா?

நாம் சுற்றுலாவை பலப்படுத்துவோம். உள்ளூர் மக்களை விடவும் அதிகமாக சுற்றுலா பயணிகள் இங்கு நடமாடும் அளவிற்கு சுற்றுலா துறையை ஊக்குவித்து பண்டாரவளை பகுதியை மேம்படுத்துவோம். இங்குள்ள சந்தைக்கு பாரிய குளிரூட்டல் தொகுதியொன்றை பெற்றுத்தருவோம். அடுத்த வருடம் வாழ்க்கை சுமையை குறைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்போம். 

நான் டீ.எஸ்.சேனநாயக்க, ஜே.ஆர் ஜயவர்தன, பிரேமதாச போன்ற ஜனாதிபதிகள் வழியை பின்பற்றி நடக்கும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் என்ற வகையில் ஆர்.எம்.அப்புஹாமியுடன் கட்சி சார்பில் பல கூட்டங்களை இந்தப் பிரதேசத்தில் நடத்தியிருக்கிறேன். கட்சிக்காக பாடுபட்டிருக்கிறேன். அன்று பிரேமதாச ஜனாதிபதி பொருளாதாரத்தை பலப்படுத்தும் பொறுப்பை ஏற்றுகொண்டு தொழில் வலயங்களை அமைக்க முன்வந்த போது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது.  அப்போது அவரை நான் தான் பாதுகாத்தேன். 

ஆனால் சஜித் பிரேமதாச இன்று ஐக்கிய தேசிய கட்சியை உடைத்துவிட்டார். அதனால் உண்மையாகவே ஐக்கிய தேசியக் கட்சியை நேசிப்பவர்கள் என்னோடு வந்து இணையுங்கள். உலகிலுள்ள பத்து கோடீஸ்வரர்களின் உதவியுடன்  கஷ்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதாக சஜித் பிரேமதாச கூறுகிறார். அது வேடிக்கையான விடயமாகும். கனடாவில் இருக்கும் ஒருவர் இங்கு வந்து பாடசாலை அபிவிருத்திக்கு உதவி செய்வாறா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். 

அதேபோல் சஜித்துக்கு பொருளாதாரம் பற்றி பேசத் தெரியவில்லை. அதற்காக ஹர்ஷ டி சில்வா,  நாலக கொடஹேவா போன்றவர்களை நம்பியிருக்கிறார். அதனால் அவரின் சொந்த கட்சியை நிர்வகிக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். எனவே ஐக்கிய தேசிய கட்சியினர் அனைவரும் எனக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும். மேலும் நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிலிண்டர் கூட கிடைக்காத நிலை உருவாகும்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா:

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதால் எமது சொந்த கட்சிகளின் நிலைப்பாடுகளை விடுத்து அவருடன் பணியாற்றுகிறோம். ஜனாதிபதியின் வேலைத் திட்டங்களே அவர் சிறந்த தலைவர் என்பதை காண்பிக்கும் சான்றாகும். 

ஜனாதிபதி உண்மைகளை மட்டும் சொல்லும் தலைவர். அதனால் தான் போலி வாக்குறுதிகளை வழங்காமல் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக சொல்கிறார். இந்நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும் துணிச்சல் அவருக்கு மட்டுமே  இருந்தது. 

எதிர்க்கட்சி வேட்பாளர்களில் எவரும் நெருக்கடிகளிலிருந்து மீண்டு வருவது தொடர்பில் எந்த வித அனுபவங்களும் இல்லாதவர்கள், சஜித் பிரேமதாச அநேகமான விடயங்களை இலவசமாக தருவதாக கூறினாலும் அதற்காக எங்கிருந்து நிதி தேடுவார் என்பதை கூறவில்லை.  

அதேபோல் ஒவ்வொரு 3 கிலோ மீற்றருக்கும் இடையில்  ஒரு பாடசாலை அமைப்பதாக அனுரகுமார திசாநாயக்க  சொல்கிறார். ஆனால் அந்தளவு மாணவர்களும் ஆசிரியர்களும் நாட்டில் இல்லை என்பதை மக்கள் கருத்தில் கொண்டு அனுபவம் மிக்க தலைவரை அடுத்த ஜனாதிபதியாக்க வேண்டும்.” என்றார்.

அமைச்சர் அலி சப்ரி:

“சஜித் பிரேமதாச இன்று இலவசமாக அனைத்தையும் தருவதாக சொல்கிறார். அதுவே அவர் இந்த நாட்டை ஏற்று நடத்தும் தகைமை அற்றவர் என்பதை காட்டுகிறது.  அனுர குமார திசாநாயக்க விவசாய அமைச்சராக ஒரு தடவை நியமிக்கப்பட்டதோடு அதைக் கூட முறையாக வழிநடத்த முடியாமல் போனது.  

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 3 தடவைகள் இந்த நாட்டை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுத்தவர். தேறி வரும் நோயாளர் ஒருவர் தன்னை குணப்படுத்திய வைத்தியரோடு பயணிப்பதா? புதிய வைத்தியரோடு பயணிப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.” என்றார். 

அமைச்சர் பந்துல குணவர்தன: 

“சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை வரலாற்று ஒருபோதும் காணத நெருக்கடியை இலங்கை 2022 ஆம் ஆண்டில் கண்டது. நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு முழுமையாக நிர்கதியான நிலையில் இலங்கை இருந்தது. இதன்போது ஜேவீபி மக்களை தூண்டிவிட்டு எம்.பி ஒருவரை வீதியில் கொலை செய்யும் அளவிற்கு நெருக்கடியை உக்கிரமடைய செய்தது. 

அந்த நேரத்தில் பாராளுமன்றத்தையும் சட்டத்தை பாதுகாக்கும் நிறுவனங்களையும் பாதுகாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முடிந்தது. இன்று கடன் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பிலான வலுவான ஒப்பந்தங்களை கைசாத்திட்டுள்ளதோடு, நாட்டின் வளர்ச்சிக்கான ஐந்து புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தேர்தல் மேடைகளில் இன்று பல போலி வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை சட்டமாக செயற்படுத்த நடவடிக்கை எடுத்த ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே.” என்றார்.

இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார்:

“இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடு இருந்த நிலையை கண்டு தலைவர்கள் நாட்டை ஏற்காமல் பயந்தோடினர். வரலாற்றுப் புத்தகத்தில் மட்டுமே இலங்கை என்ற ஒரு நாடு மிஞ்சும் என்றனர்.  ஆனால் தனியொரு சிப்பாயை போல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டார். அதனால் நாட்டை மீட்ட தலைவருக்கு ஜனாதிபதி தேர்தலில் பிரதி உபகாரம் செய்ய  நாம் காத்திருக்கிறோம்.” என்றார். 

தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்:

” இலங்கை வரலாற்று மாறுபட்ட தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் இருக்கப் போகிறது. சர்வதேச நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டமே உள்ளார். அவரின் தேர்தல் விஞ்ஞாபத்தில் கூறியிருக்கும் அனைத்து விடயங்களும் நடைமுறைச் சாத்தியமான விடயங்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.எனவே சிலிண்டருக்கு வாக்களித்து அதனை வெற்றிபெறச் செய்யாவிட்டால் சிலிண்டர் தேடி மக்கள் வீதிகளில் அல்லல்பட வேண்டியிருக்கும்”. என்றார் 

முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ:

“இரண்டு வருடங்களுக்கு முன்பு நிலைமை எப்படியிருந்தது என்பதை மக்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். அப்போது நசுங்கிப்போய் கிடந்த எம்மை மீட்டவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே. மற்றைய இரு வேட்பாளர்களும் மக்கள் கஷ்டப்பட்ட போது தம்மை பாதுகாத்துக்கொண்டால் போதும் ஓடி மறைந்தவர்கள். 

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானால்  அவரின் அமைச்சரவையில் யார் இருப்பார்கள் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே சொன்னதை செய்து காட்டிய தலைவருக்கு நன்றிகடன் செலுத்தும் தேர்தலாக இம்முறை ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொள்ளுங்கள்.” என்றார்.

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க:

“அரசாங்கம் இலசமாக பகிர்ந்த அரிசியில் புழு இருப்பதாக ஜேவிபியினர் போலி பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் போல் அன்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை கட்டியெழுப்ப பாடுபட்டார்.  பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டதால் நாம் தானாக முன்வந்து ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டும். 

யுத்தம் முடிந்து 12 வருடங்களில் டொலரின் பெறுமதி 420 ரூபாய் வரை அதிகரித்தது  துர்ப்பாக்கிய நிலைமையாகும். சஜித் பிரேமதாச காலி முகத்திடலுக்கு சென்ற போது மக்கள் அடித்து விரட்டினர்.  அனுர குமார திசாநாயக்கவும் கனவிலும் தன்னால் நாட்டை பொறுப்பேற்ற முடியாது என்று சொன்னார். 

எனவே இவ்வாறனவர்களிடம் நாட்டை கையளித்து விட்டு அவர்களால் முடியாத தருணத்தில் மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தேடி வந்தால் அவர் நாட்டை ஏற்றுகொள்ள கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். தேர்தலின்  மூலம் மக்கள் வழங்கும் நாட்டை மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்க வேண்டும்.” என்றார். 

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்:

“நெருக்கடியிலிருந்து இலங்கை முழுமையாக மீண்டு வரவில்லை. நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டும். இலங்கையில் இன்று நாட்டில் யுத்தம் இல்லை. பொருளாதார பிரச்சினையே உள்ளது. அந்த பிரச்சினைக்கு தீர்வு தரக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

மகாசங்கத்தினர் தலைமையிலான சமய தலைவர்கள், இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார,  முன்னாள் அமைச்சர் விஜித் விஜிதமுனி த சொய்சா, பண்டாரவளை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் ரவி குணவர்தன, ஜனாதிபதியி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க,பிரதேச அரசியல் தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

Related posts

ரம்பாவால் திறந்து வைக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகம்!

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியாகாது

கால்நடைகளை திருடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!