அரசியல்உள்நாடு

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்கும் பொறுப்பை நாம் ஏற்போம் – சஜித்

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எரிப்பதா நல்லடக்கம் செய்வதா என்கின்ற பிரச்சினை எழுந்த போது மக்களுடைய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மத கலாச்சார, மக்களுடைய பண்பாட்டு விடயங்களை மறந்து தனிப்பட்ட இலாபத்திற்காகவும், வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்காகவும் மதத்தையும், அறத்தையும், சுய கௌரவத்தையும் காட்டிக் கொடுத்து, இனவாதத்தை தூண்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இனவாதத்தினால் முழு நாடும் சீரழிந்து போனது. இனவாதத்தையும் மதவாதத்தையும், இனமத பேதங்களையும் ஊக்குவிக்கின்ற யுகத்தை இல்லாமல் செய்வோம். அனைத்து இன மக்களும் இந்த மோசமான அரசாங்கத்தினால் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்ற, வேதனையான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் துன்பத்தைத் துறந்து கண்ணீரைத் துடைத்து சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குகின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு 29 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அநுராதபுரம் நாச்சியாதீவு நகரில் நேற்று(30) மாலை வெற்றிகரமாக இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்சி மாறுகின்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி.

செப்டம்பர் 21 ஆம் திகதி உருவாக்கப்படுகின்ற ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக ஒரு பக்கத்திலிருந்து இன்னும் ஒரு பக்கத்திற்கு கட்சி மாறுகின்ற இந்த முறையை தடை செய்வோம்.

அதற்கான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு, இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு முடிவெடுக்கக் கூடிய வகையில் சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வீடில்லாத மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.

தான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வரப்பிரசாதங்களை வழங்கி நிபந்தனைகளுக்காக உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதில்லை.

கொள்கையின் அடிப்படையிலே இணைத்துக் கொள்வோம். கிராமத்தையும் பின்னர் நகரத்தையும் பின்னர் நாட்டையும் அபிவிருத்தி அடையச் செய்யும் கொள்கை திட்டத்துடனே நாம் செல்கின்றோம். காணியில்லாத வீடில்லாத மக்களுக்கு காணிகளை வழங்கி, வீடுகளை அமைத்துக் கொடுத்து கம்உதாவ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதோடு மலைநாட்டு தோட்டங்கள், கீழ்நாட்டு தோட்டங்கள், கிராமிய, நகர, நடுத்தர வகுப்பு மக்கள், மற்றும் அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்களையும் உள்ளடக்கி, தேசிய வீடமைப்புக் கொள்கை ஒன்றை உருவாக்கி, தமது சொந்த வீடுகளிலே வாழ்கின்ற உரிமையை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

வறுமை ஒழிப்பு வேலை திட்டம்.

வறுமையை ஒழிப்பதற்கான புதிய வேலை திட்டத்தை முன்னெடுப்பதோடு, 24 மாதங்களுக்கு ரூபா 20 ஆயிரம் விதம் வழங்கி 24 மாதங்களுக்குள் வறுமையை ஒழிக்கின்ற வேலை திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.

தொடர்ந்தும் நிவாரணங்களைப் பெற்று அதிலேயே தங்கி வாழாத ஒரு பரம்பரையை உருவாக்க நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை ஐயாயிரம் ரூபாக்கு வழங்குவதோடு, விவசாய கடனையும் இரத்து செய்வது மாத்திரம் அல்லாமல் QR முறையில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து பஸ் உரிமையாளர்களுக்கும், சக்தி அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருள்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் திட்டங்களையும் முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

மழையுடனான வானிலை குறையும் சாத்தியம்

பயணக் கட்டுப்பாட்டினை கண்காணிப்பதற்கு சுமார் 22,000 பொலிஸார் கடமையில்