1983 ஆம் ஆண்டு தமிழர்களை படுகொலை செய்து இனக்கலவரத்தை ஜே.ஆர்.ஜயவர்தனவே தோற்றுவித்தார். தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் இம்முறை அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாட்டு பற்றுள்ளோர் ரணில், சஜித், அனுரகுமார ஆகியோருக்கு வாக்களிக்கமாட்டார்கள் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி தெரிவித்தார்.
குருநாகல், நிக்கவெரட்டிய பகுதியில் திங்கட்கிழமை (26) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சிரேஷ்ட அரசியல்வாதிகள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிழலில் இருந்துக் கொண்டு தங்களை வளப்படுத்திக் கொண்டு தற்போது நாட்டுக்காக என்று குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பக்கம் சென்றுள்ளார்கள். இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொண்டு வந்த அனைத்து சட்டமூலங்களுக்கும் ஆதரவு வழங்கினோம். இருப்பினும் ஓரினச் சேர்க்கை சட்டமூலத்துக்கு நாங்கள் ஆதரவு வழங்கவில்லை. அத்துடன் நாட்டுக்கு எதிரான சட்டமூலங்களுக்கு நாங்கள் ஆதரவு வழங்கவில்லை.
எரிபொருள் , எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியும்.
பொருளாதார நெருக்கடிக்கு தோற்றம் பெறுவதற்கு ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.
நாட்டின் தேசிய பாதுகாப்பையும், தேசியத்தையும் பாதுகாக்க வேண்டுமாயின் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும்.
முதலாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நாட்டின் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தினார். புறக்கோட்டையில் இருந்த தமிழர்களின் கடைகளை சிங்களவர்கள் தீ வைத்தார்கள்.
இதனை தொடர்ந்து தமிழர்களை படுகொலை செய்த இனக்கலவரம் 1983 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது. இதன் விளைவாகவே பிரபாகரன் தலைவரானார்.
இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தோற்றம் பெறுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் மாமனாரான ஜே.ஆர். ஜயவர்தன பொறுப்புக் கூற வேண்டும்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமார திஸாநாயக்க ஆகியோர் குறிப்பிடுகிறார்கள்.
தேசியத்தின் மீது பற்றுள்ளவர்கள் இவர்களுக்கு ஆதரவளிக்கமாட்டார்கள்.ஆகவே தேசியத்தையும் நாட்டின் இறையாண்மையும் பாதுகாத்த மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
-இராஜதுரை ஹஷான்