அரசியல்உள்நாடு

தேர்தல் காலத்தில் தவளைகள் போல் பாய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை – நாமல்

தேர்தல் காலத்தில் வரப்பிரசாதம் மற்றும் தனிப்பட்ட இலாபம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தவளை போல் பாய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி தாவல்களில் ஈடுபடுபவர்களுக்கு உயர்நீதிமன்றம் அண்மைக் காலமாக வழங்கிய தீர்ப்புக்களை வரவேற்கிறேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

‘அன்பான தாய், தந்தையரே மூத்த மகன் ஊருக்கு வருகிறேன்’ என்ற தொனிப்பொருளின் கீழ் அம்பாந்தோட்டை  பகுதியில் இன்று திங்கட்கிழமை (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியல்வாதிகள் எம்மை விட்டுச் சென்றாலும் மக்கள் எம்முடன் உள்ளார்கள் என்பதை எமது முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியுள்ளோம்.  அடிமட்ட மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.

தேர்தல் காலத்தில் வரப்பிரசாதங்கள் , தனிப்பட்ட இலாபம் ஆகியவற்றுக்காகத் தவளைகளைப் போல் பாய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். குறுகிய தேவைகளுக்காகக் கட்சி தாவல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் அண்மைக்காலமாக வழங்கியுள்ள தீர்ப்புக்களை வரவேற்கிறேன்.

நபர்களை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் அரசியலில் ஈடுபடவில்லை. கொள்கைகளை முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறோம். நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. என்பதில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

தேர்தல் வெற்றிக்காகப் பொய்யான வாக்குறுதிகளை எத்தரப்பினருக்கும் வழங்கப் போவதில்லை. அபிவிருத்தித் திட்டங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் : CCD இற்கு பிறப்பித்துள்ள உத்தரவு

 நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த NPP வேட்பாளர் மரணம்!

இலங்கையை அச்சுறுத்தும் ‘டெல்டா’