ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பாதுகாப்பு அமைச்சின் கடமையாகும்.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்துக்கமைய பாதுகாப்பு பதவிநிலை பிரதானியின் தலைமையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
மேலும் தேர்தல் கடமைகளில் பெரும்பாலும் பொலிஸ் உத்தியோகத்தர்களே ஈடுபடுத்தப்படுவர்.
எவ்வாறிருப்பினும் தேர்தல் காலத்தில் ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால், பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் இராணுவம், கடற்படையினலின் ஒத்துழைப்புக்களை வழங்கவும் பாதுகாப்பு அமைச்சு தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அது மாத்திரமின்றி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தீவிரவாத செயற்பாடுகள், அடிப்படைவாத செயற்பாடுகள், அரகலய போன்ற செயற்பாடுகள் ஏற்படாமலிருப்பதை பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியில் தான் உறுதி செய்வதாகக் குறிப்பிட்ட அவர், மீண்டுமொரு அவ்வாறான தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இந்த விடயங்களைத் தெரிவித்தார்.