அரசியல்உள்நாடு

வட, கிழக்கு மக்கள் ரணிலுக்கே ஆதரவு – எஸ்.பி.திஸாநாயக்க.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காவிடின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறுவார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் ஜனாதிபதிக்கே ஆதரவு வழங்குவார்கள் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (29)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் அல்லது அவருக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பலமுறை எடுத்துரைத்துள்ளோம்.

கட்சியின் ஒரு தரப்பினர் மாத்திரமே கட்சியின் உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்கள்.

அத்துடன் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களும் இதே நிலைப்பாட்டில் தான் உள்ளார்கள்.

ஆகவே கட்சியின் பெரும்பான்மை நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து சிறந்த தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காவிடின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தலில் வெற்றிப் பெறுவார்.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் 2022 ஆம் ஆண்டு நிலைவரமே மீண்டும் ஏற்படும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவார்கள். ஆகவே பொதுஜன பெரமுன சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் போட்டி நிலவும்.அரகலயவின் போது மக்கள் மத்தியில் ஜே.வி.பியினருக்கு இருந்த செல்வாக்கு தற்போது முழுமையாக வீழ்ச்சியடைந்து விட்டது.

அனுரகுமார திஸாநாயக்கவின் பேச்சு கேட்பதற்கு அருமையாக இருக்கும் ஆனால் நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றார்.

– இராஜதுரை ஹஷான்

Related posts

IMF மற்றும் NPP பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு

திருகோணமலையில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழா!

ஓய்வூதியம் பெறுவோருக்கு இலவச பயணச் சீட்டு வழங்கும் நிகழ்வு ஆரம்பம் [PHOTO]