அரசியல்உள்நாடு

அரசியலமைப்பு ஒரு சிலரின் சொத்தாக இருக்க இடமளிக்காமல், பாடசாலை மட்டத்திலிருந்து கற்பிக்கப்பட வேண்டும்.

ஜனநாயகம், அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் கொள்கை உருவாக்கம் பற்றிய முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை பிள்ளைகள், மாணவச் செல்வங்கள் அறிந்திருக்க வேண்டும்.

இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதிகளை சகல பாடசாலை நூலகத்திற்கும் வழங்க வேண்டும். அப்போது, யாரும் சொல்வதைக் கேட்டறிவதை விட மக்களால் தாமாகவே உண்மையை அறிந்து கொள்ள முடியுமான நிலை காணப்படும்.

குடியுரிமைக் கல்வியில், பாடசாலை மாணவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய புரிதலை வழங்க வேண்டும். இதை ஒரு சிலர் விளக்க முயன்றால், மிகவும் ஆபத்தான சூழ்நிலை உருவாகும்.

அவர்கள் நாட்டின் சட்டத்தை தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளும் நிலை காணப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு கூட தனிப்பட்ட பாவனைக்கும், தேவைக்கும் ஏற்ப பயன்படுத்தும் நிலை ஏற்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகாரம் போன்றவை குறித்து வெவ்வேறு குழுக்கள் வெவ்வேறு கதைகளைச் சொல்லிவருகின்றன. எனவே, இது குறித்து பொதுமக்கள் சரியான அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

இல்லையெனில், நாட்டின் தற்காலிக பொறுப்பாளர்களாக இருக்கும் ஆட்சியாளர்கள், அரசியலமைப்பின் உண்மைகள் மற்றும் சரத்துக்களை வெவ்வேறு வழிகளில் விளக்கி, தங்களுக்குத் தகுந்தவாறு வியாக்கியாணங்களை முன்வைப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தை அறிந்திருந்தால் யாரையும் ஏமாற்ற முடியாது. அடிப்படை உரிமைகள் குறித்து அறிந்துகொள்வதுடன் உண்மை நிலையை மக்கள் அறிந்துகொள்ள முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் மக்கள் ஏமாற்றப்பட மாட்டார்கள். நிச்சயமாக வாழ்வாதாரத்திற்கான சரியான வழியை உருவாக்கித் தருவேன் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 380 ஆவது கட்டமாக 1177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன களுத்துறை, பண்டாரகம, மில்லனிய, அகுருவாத்தோட்ட, உடுவர கனிஷ்ட வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 26 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

Related posts

‘பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இன்னும் 18 மாதங்கள் ஆகும்’

ஹம்பாந்தோட்டை மேயர் பதவி இராஜினாமா

இந்திய இலங்கைக்கான கப்பல் சேவை ரத்து!