இலங்கை இளைஞர்கள் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மாறாக உள் நாட்டிலேயே இளைஞர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய சரியான திட்டத்தை அடுத்த 10 வருடங்களில் செயற்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
இல்லாவிட்டால் கல்விக்காக பெருமளவு பணத்தைச் செலவு செய்யும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கான பலன் நாட்டுக்கு கிடைக்காது போகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கை தொடர்ந்தும் வளர்ச்சியடையாத நாடாக இருக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் 106 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்தார்.
புதிய தொழிநுட்பத்திற்கு ஏற்ற வகையில் கல்வி முறையை சீர்திருத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கல்லூரி இசை வாத்தியக்குழுவினர் சிறப்பாக வரவேற்றதுடன், கல்லூரியின் கெடட் படையினரும் ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தினர்.
அதனையடுத்து கல்லூரி வளாகத்திலிருக்கும் படைவீரர் நினைவுத் தூபிக்கு ஜனாதிபதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் 106ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட “X-ban” 2024 கல்வி விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக கண்காட்சியும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.
அதனையடுத்து கல்லூரி அதிபர் கசுன் குணரத்ன X-ban” 2024 நினைவுப் சின்னத்தை ஜனாதிபதிக்கு வழங்கிவைத்தார்.
இதன்போது க.பொ.த. உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதியால் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
இந்த கல்லூரிக்கு நான் கடைசியாக 1992 ஆம் ஆண்டு வருகை தந்திருந்தேன். அதற்கு முன் கல்வி அமைச்சராக இக்கல்லூரிக்கு வந்து கல்லூரிக்கு தேவையான கட்டிடங்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளேன். பிறகு 1992ஆம் ஆண்டு தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இந்தக் கல்லூரிக்கு வந்தேன். அன்று தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி பேசினோம்.அதனை இன்று கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் காண முடிகிறது. இந்தக் கண்காட்சியும் அதனையே பிரதிபலிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் இந்த நாடு வேகமாக மாறிவிட்டது. ஆனால் 04 வருடங்களுக்கு முன்னர், கொவிட் தொற்றுநோய் காரணமாக, எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அனைத்து மக்களும் அந்த சிரமத்தை எதிர்கொண்டனர். எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களைப் பெற நாங்கள் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது.
“கிசா கோதமியா மாம்பழக் கொத்தை தேடிப் போனதை” போல இந்தக் கஷ்டத்தை காணாதவர்களை தேடிக்கொள்ள முடியாமல் இருந்தது. எது எவ்வாறாயினும் அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தற்போது நாம் மீண்டுள்ளோம். வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டவுடன் எமக்கு வௌிநாட்டு உதவிகளும் கிடைக்கும்.
ஆனால் இன்னும் சில சிக்கல்கள் உள்ளன. எனவே, சரியான திட்டத்துடன் பயணிக்க வேண்டும். அதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இந்த பொருளாதார சுமையை படிப்படியாக குறைத்து பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும். பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம், மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க முடியும்.
மேலும், கடந்த 04 வருடங்களாக கல்விக்கான செலவீனங்களை மட்டுப்படுத்தியிருந்தோம். எனவே இப்போது கல்விக்காக பணம் செலவழித்து புதிய தொழில்நுட்பத்துடன் பாடசாலை கட்டமைப்பை ஒழுங்குபடுத்த எதிர்பார்க்கிறோம். இன்று இந்த கண்காட்சியில் கல்லூரி மாணவர்கள் குழு தயாரித்த ட்ரோன் உபகரணங்களைப் பார்த்தோம்.
மேலும், பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) குழுக்கள் உருவாக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு பணம் தேவைப்படுகிறது. மேலும், பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கல்வித் துறையில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு உதவவும் முன்வருமான எலோன் மஸ்கிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இம்மாத இறுதிக்குள் அவருக்கு இலங்கையில் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான அனுமதிப் பத்திரங்களை வழங்க எதிர்பார்க்கிறோம்.
மேலும், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் இளைஞர் யுவதிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். எம்மால் 04 வருடங்களாக தொழில்வாய்ப்புகள் வழங்க முடியவில்லை. எதிர்காலத்தில் இவர்களின் தொகை மேலும் அதிகரிக்கும். அதற்கு தீர்வு காண வேண்டும். இப்பிரச்சினைகள் அதிகரித்தால் நாட்டில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கலாம் .எனவே, தொழில் மற்றும் வருமான வழிகளை உருவாக்க நாட்டில் பெரிய பொருளாதார மாற்றம் செய்யப்பட வேண்டும்.
1977ஆம் ஆண்டு இதேபோன்றதொரு சூழலை நாங்கள் எதிர்கொண்டோம். கம்பஹா மாவட்டத்தில் அப்போது தொழிற்சாலைகள் இருக்கவில்லை. கட்டுநாயக்க மற்றும் பியகம வர்த்தக வலயங்களை ஆரம்பித்தோம். சந்திரிகா குமாரதுங்க அத்தனகல்ல பிரதேசத்தில் தொழிற்சாலைகளை ஆரம்பித்தார். இப்போது கம்பஹா மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் உள்ளன. அத்துடன் அடுத்த வருடம் கேரகல பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திருகோணமலைக்கு மாற்றப்படும் போது சபுகஸ்கந்த பிரதேசத்தில் ஒரு பெரிய தொழில் பேட்டையொன்றை உருவாக்க முடியும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க புதிய முதலீடுகளைப் பெற வேண்டும். அவற்றை நிறுத்தினால் தொழில் வழங்க முடியாது. அப்போது நாட்டில் போராட்டங்கள் வெடிக்கலாம்.
மேலும், நாட்டில் விவசாயத்தை முன்னேற்றும் வகையில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். மேலும், சுற்றுலாத் துறையை 25 இலட்சத்தில் இருந்து 50 இலட்சமாக உயர்த்தி, பாரிய தொழில்நுட்ப பொருளாதாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இதற்கு புதிய தொழில்நுட்ப அறிவு கொண்ட இளம் தலைமுறையினர் அவசியம். அந்த நோக்கத்திற்காக, 04 புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் துறைகள் அனைத்திலும் பெரிய புரட்சியை ஏற்படுத்தவும், நாட்டில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அந்த புதிய பொருளாதாரம் உருவாக்கப்படாவிட்டால், இந்த நாட்டின் மாணவர்கக்கு எதிர்காலம் இருக்காது.
இன்று நமது இளைஞர்கள் வேலை தேடி அமெரிக்கா, டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர். அந்த நாடுகளில் உள்ள நிலையை ஏன் இலங்கையில் உருவாக்கப்படவில்லை என்று கேட்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். நாட்டை முன்னேற்றி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இல்லையேல் இந்தக் கல்வியால் நாட்டுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. அப்படியானால், நாம் எப்போதும் வறிய நாடாகவே இருக்க வேண்டியிருக்கும்.
அடுத்த 10 ஆண்டுகளில் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். அந்த பொருளாதாரப் பரிமாற்றத்திற்கு தேவையான சட்டங்களை கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்றுமதி பொருளாதாரம் வலுப்பெற்று உலக சந்தையை வெல்ல வேண்டும். தேரவாத பௌத்தம் இருக்கும் முக்கிய நாடுகளாக இலங்கை, பர்மா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. மியான்மார் பழைய முறைக்குள் சிக்கியிருக்கிறது. ஆனால் புதிய முறையின்படி முன்னேறிச் செல்வதால், தாய்லாந்து விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே தேரவாத பௌத்தத்தை பாதுகாத்த நாமே எமது நாடு எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். தாய்லாந்தைப் போன்று பௌத்த சூழலில் உலகச் சந்தையை நாம் வெல்ல வேண்டும். நாம் அனைவரும் எதிர்காலத்தைப் பார்த்து பணியாற்ற வேண்டும். புதிய பொருளாதாரம் உருவாக்கப்படும் போது தொழில் பிரச்சினை தீர்ந்து இலங்கையில் தங்கக்கூடிய சூழல் உருவாகும்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் வருண ராஜபக்ஷ மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.