அரசியல்

நிமல் சிறிபால டி சில்வாவிற்கு மீண்டும் அழைப்பாணை

எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விடயங்களை முன்வைக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு 10 – டி.பி ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தை கடந்த 5 ஆம் திகதி பூட்டி வைத்தமை தொடர்பிலேயே மாளிகாகந்த நீதவான் லோச்சனீ அபேவிக்ரம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பிரதம செயலாளர் திலங்க சுமதிபாலவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (19) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றம் இதற்கு முன்பு விதித்த அழைப்பாணையை வழங்குவதற்காக பல தடவைகள் நிமல் சிறிபால டி சில்வாவின் வசிப்பிட முகவரிக்கு சென்ற போதிலும் அவர் அங்கு இருக்கவில்லை என திலங்க சுமதிபாலவின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி உபாலி அமரசிங்க இன்று மன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து நிமல் சிறிபால டி சில்வாவுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனிடையே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் அதன் அலுவலக இடத்தின் உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக திலங்க சுமதிபாலவினால் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த 2 வழக்குகளும் மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

Related posts

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல் பொய்யானது

editor

பாலித ரங்கே பண்டாரவின் கருத்து : அவ்வாறான தீர்மானம் கட்சிக்கு நல்லதல்ல – நவீன் திசாநாயக்க

ஜனாதிபதி தேர்தல் – 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

editor