30 வருடகால யுத்தத்தின் சாபத்தினால் அவல வாழ்வை முன்னெடுத்து வரும் வடக்கு மக்களின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சரியான திட்டமிடல் ஊடாக, சரியான தொலைநோக்கு பார்வையில் மிக இலகுவாக கட்டியெழுப்பக்கூடிய மாவட்டமாக இந்த மன்னார் மாவட்டத்தை நான் பார்க்கின்றேன்.
இங்கு 5 பிரதேச செயலகப் பிரிவுகள், 153 கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் 382 கிராமங்கள், குக்கிராமங்கள் காணப்படுகின்றன. மன்னாரின் எதிர்கால அபிவிருத்திக்காக மன்னாருக்கு தனியான ஜனாதிபதி செயலணியொன்றை தாபிப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த ஜனாதிபதி செயலனி ஊடாக ஐந்து பிரதேச செயலகத்திலும் 5 பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பேன்.
அடிமட்டத்தில் இருந்து பெறப்படும் கருத்துக்கள், ஆலோசனைகளின் பிரகாரம் வகுக்கப்படும் மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பேன்.
இதன் ஊடாக மீன்பிடி, சுற்றுலா கைத்தொழில், விவசாயம், வர்த்தகம் போன்ற துறைகளைப் பலப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
இவர்களை இணைத்துக் கொண்டு மன்னார் மாவட்டத்தைக் கட்டியெழுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பாடசாலைகளுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் எமது இந்த பிரபஞ்சம் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக சேவையாற்ற முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்நாட்டின் 76 ஆண்டுகால வரலாற்றில் முன்னெடுக்கப்பட்ட சம்பிரதாய திட்டம் என்று இந்த பிரபஞ்சம் திட்டத்தைக் கூற முடியாது. அரச நிதிகளால் இந்த திட்டங்கள் எம்மால் முன்னெடுக்கப்படவில்லை.
நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நன்நோக்கில் எமக்கு வழங்கப்படும் நன்கொடையாளர்களின் பங்களிப்பிலயே இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 317 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன மன்னார், தொட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 15 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை நூலகத்திற்குத் தேவையான ஆங்கில நூல்களைக் கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.